மே.17.
பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பேருந்து ஒன்று இன்று அதிகாலை கரூர் அருகேயுள்ள நாவல் நகர் பகுதியில் சென்றபோது சின்னவடுகப்பட்டியில் இருந்து உப்பிடமங்கலம் நோக்கி முன்னால் சென்றுக் கொண்டிருந்த ட்ராக்டர் மீது மோதியது.இதில் நிலைத்தடுமாறிய பேருந்து சாலை மையத்தடுப்பை தாண்டி கோவில்பட்டியில் இருந்து ஏற்காடுக்கு 32 பயணிகளுடன் சுற்றுலா சென்ற வேன் மீது மோதியது.
இதில் வேன் ஓட்டுநர் சசிகுமார் (52), வேனில் பயணம் செய்த சிறுமி தக்ஷிகா (8) உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேனில் பயணம் செய்த 12 பேர், ட்ராக்டர் ஓட்டுநர், ஆம்னி பேருந்து ஓட்டுநர் என 32 பேர் காயமடைந்தனர்.வாங்கல் போலீஸார் மற்றும் கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரர்கள் உதவியுடன் விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
சாலை விபத்தில் காயம் அடைந்தவர்கள் 19 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 18 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி. செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் தங்கவேல், எம்எல்ஏ சிவகாமசுந்தரி ஆகியோர் நேரில் சென்று காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்கினர். காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய பின்னர் மருத்துவமனை வளாகத்தில் கரூர் எம்எல்ஏ செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியது- கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் நான்கு பேர் இறந்துள்ளனர். 19 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 18 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் உயர்சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
அனைவருக்கும் தரமான உயர் சிகிச்சை அளிக்கவும், கலெக்டர், எஸ்.பி. ஆகியோருடன் சந்தித்து ஆறுதல் கூறி நல்ல தரமான சிகிச்சை விரைந்து வழங்க மருத்துவமனை நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் துணையாக இருப்பார்கள் என தெரிவித்து இன்னும் மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கும் உயர் சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.