பிப.17.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தை தேசவிரோத, சமூக விரோத, தீவிரவாத போராட்டம் என நான் பேசியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. உண்மை என்னவென்றால் ஜல்லிக்கட்டுக்காக அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்ட உடன் இந்த போராட்டத்தை முதன் முதலில் ஆரம்பித்த ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன் ஜல்லிக்கட்டு ஆர்வலர் கார்த்திகேய சிவசேனாபதி, பெரியவர் அம்பலத்தரசர், ராஜேஷ், ஹிப்ஹாப் தமிழா என்கிற ஆதி ஆகியோர் சென்னையில் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது அனைவரும் போராட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையும் மீறி ஒரு சிலர் காவிரி நதிநீர் பிரச்சினை,முல்லைப் பெரியாறு பிரச்சனை பன்னாட்டு வர்த்தகங்கள் மீதான தடை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை தொடர்ந்து, அதோடு இந்திய இறையாண்மைக்கு எதிராக பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரித்து அறிவிக்க வேண்டும். இந்திய குடியரசு தினத்தை கருப்பு தினமாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறினர். இதற்கான ஆதாரங்களை காவல் துறையினர் அளித்து அதன் அடிப்படையில் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத்தான் நான் சட்ட பேரவையில் எடுத்து விளக்கினேனே தவிர, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நான் ஒருபோதும் தேசவிரோதிகள் என்றோ, தீவிரவாதிகள் என்றோ, குறிப்பிடவில்லை. அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமரிடம் நான் எடுத்துக் சொல்வதற்காக டெல்லி செல்ல இருந்தபோது போராட்டக்காரர்கள் என்னை சந்திக்க வேண்டும் என்று கேட்டபோது டெல்லி பயணத்தை சற்று தள்ளி வைத்துவிட்டு அவருடன் பேசிவிட்டு சென்றேன். ஜல்லிக்கட்டு குறித்து என் மீதான பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி விஷம பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவருக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.