அக்.14.
புஷ்பா படத்தில் செம்மரக்கட்டைகளை நூதன முறையில் கடத்தி காவலர்களுக்கு டிமிக்கி கொடுக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அதேபோல மாடுகளை கொண்டு செல்லும் லாரியில் ரகசியமாக கஞ்சா கடத்தியதை கரூர் மாவட்ட போலீசார் கண்டுபிடித்துள்ளனர். கடத்தல்காரர்கள் மூன்று பேரை தூக்கியதுடன் 42 கிலோ எடை கொண்ட கஞ்சாவையும் லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்த விபரம்-
சட்டவிரோதமாக போதை பொருட்கள் கடத்தி வருவதை தடுப்பதற்கும் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் கரூர் மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட எல்லை காவல் நிலைய பகுதிகளில் தொடர் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 13ஆம் தேதி சின்ன தாராபுரம் காவல் சரகம் பெரிய திருமங்கலம் பிரிவு ரோட்டில் அரவக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.
அப்போது அந்த வழியாக வந்த அசோக் லேலண்ட் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இருந்து கேரளாவுக்கு எருமை மாடுகளை ஏற்றிக்கொண்டு செல்வதாக வந்தவர்கள் கூறினர் . கேரளாவிற்கு வழக்கமாக செல்லும் வழித்தடத்தில் செல்லாமல் இந்த ரோட்டில் வந்தது அறிந்த போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. லாரியை சோதனை செய்தனர் . அதில் இரண்டு வெள்ளை சாக்கில் 42 கிலோ எடை கொண்ட கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்புரூ. 21 லட்சம் ஆகும். கடத்தி வந்த கௌதம், ராம்குமார், கரன்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் சின்னதாராபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வந்த நபர்களை வாகன சோதனையில் திறம்பட செயல்பட்டு கைது செய்து, விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சாவையும் கைப்பற்றியதற்காக கரூர் மாவட்ட எஸ்பி தனிப்படை, மதுவிலக்கு அமலாக்க பிரிவு தனிப்படையினர், அரவக்குறிச்சி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை எஸ்.பி பாராட்டினார்.











