நவ.11.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள தடா கோவிலில் ஐம்பதாயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வரவேற்று பேசினார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விவசாயிகளுக்கு மின் இணைப்பு ஆணைகளை வழங்கி விழாவில் பேசியது-
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பயிர்மான கழகத்தின் சார்பில் ஓராண்டில் உழவர்களுக்கு ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்குவோம் என அறிவித்த போது இது நடக்குமா?. சாத்தியமா?. என கேள்வி எழுப்பினார்கள். நடக்குமா என்பதை நடத்திக் காட்டுவதும் சாத்தியமா என்பதை சாத்தியமாக்குவதும் தான் திமுக ஆட்சி. இனிமேல் அப்படி ஒரு எண்ணம் சந்தேகம் யாருக்கும் வர வேண்டாம் . இப்போது கூடுதலாக 50 ஆயிரம் இணைப்புகளையும் நானே வழங்கி இருக்கிறேன். இதன் மூலமாக ஒன்றரை லட்சம் உழவர்கள் பயனடைய இருக்கிறார்கள். அவர்கள் மூலமாக தமிழ்நாட்டில் எவ்வளவு உணவு பொருட்கள் கிடைக்க போகிறது என்பதை நினைத்தாலே பெருமையாக இருக்கிறது. முதன் முதலில் இந்தியாவிலேயே மறைந்த தலைவர் கலைஞர் தான் முதல்வராக இருந்த போது இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை உருவாக்கி தந்தார்.
10 ஆண்டு ஆட்சியில் 2.20. 15 மாதத்தில் 1.50 லட்சம் இணைப்புகள்
கடந்த பத்து ஆண்டு காலம் ஒரு ஆட்சி நடந்தது. நடந்தது என்று சொல்ல முடியாது இருந்தது. பத்து ஆண்டுகளில் மொத்தமே 2 லட்சத்து 20 ஆயிரம் வேளாண் மின் இணைப்புகள் மட்டும் தான் அவர்களால் வழங்கப்பட்டது. ஆனால் நாம் 15 மாத காலத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இணைப்புகளை வழங்கி இருக்கிறோம். சொன்னதை செய்வோம். சொல்லாமலும் செய்வோம். இதுதான் ஸ்டாலினுடைய முழக்கம். நாடு முழுவதும் நமது நல்லாட்சியில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. விளைச்சலும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது . பாசனப் பரப்பும் உணவு பொருள் உற்பத்தியும், கூடுதல் ஆகி வருகிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது உணவு பொருட்களின் விலையும் குறைவாக உள்ளது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி அளித்ததன் மூலம் பெண்களின் பொருளாதார வலிமை அதிகரித்துள்ளது. எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நாங்கள் அதிக அளவில் உண்மையாக இருக்கிறோம் என்பதற்கு இவையெல்லாம் அடையாளம். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இந்த அரசு பொறுப்பேற்றது முதல் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
மின்னகம் மின்னுகர்வோர் சேவை மையம் திறந்து 99 விழுக்காடுகளுக்கு உடனடி தீர்வு- உயர் மின்பளு மற்றும் குறைந்த மின்னழுத்தம் தவிர்க்க 8905 மின்மாற்றிகள் புதிய மின், கட்டமைப்பு மேம்படுத்தல் மின் மாற்றிகள் நிறுவப்பட்டன. 23 ஆயிரத்து 780 புதிய மின் மின் மாற்றிகள் நிறுவப்பட்டன.
அகில இந்திய அளவில் காற்றாலை மின் உற்பத்தியில் முதலிடம் 1528 மெகாவாட் புதிய சூரிய மின் சக்தி மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு இந்திய அளவில் சூரிய ஒளி மின் உற்பத்தியில் நான்காவது இடம். மொத்த மின் நுகர்வில் 74 விழுக்காடு.பங்களிப்பு செய்து மரபுசாரா எரிசக்தியின் மூலம் இந்திய அளவில் ஒரு மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறோம்.
தமிழ்நாட்டில் தற்போது உள்ள மின் உற்பத்தி நிலையங்களின் திறன் 34 ஆயிரத்து 867 மெகாவாட் . 2030 ஆம் ஆண்டுக்குள் மரபுசாரா எரிசக்தி உள்ளிட்ட அனைத்து உற்பத்தி நிலையங்களிலும் மொத்தம் 30 ஆயிரத்து 500 மெகாவாட் கட்டமைப்புடன் இணைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மின் உற்பத்தி நிலையங்களை தமிழ்நாடு மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். 2030 ஆம் ஆண்டில் மின் உற்பத்தி 65 ஆயிரத்து 367 மெகாவாட் திறனாக உயரும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சூரிய சக்தி மாவட்டங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதனால் தமிழ்நாடு ஆனது மின் உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதோடு அகில இந்திய அளவில் மின் உற்பத்தியில் முதல் மாநிலமாக திகழும். முடியுமா என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம்.
முடித்தே தீருவோம் என்பது வெற்றிக்கான தொடக்கம் என்பது கலைஞர் நமக்கு கற்றுத் தந்திருக்கிறார். அத்தகைய வெற்றியை எந்நாளும் பெறுவோம் மக்களுக்கான சேவையை மகத்தான சேவை என்ற ஒரே குறிக்கோளோடு, மழை நேரங்களிலும் இயற்கை இடர்பாடுகளின் போதும் தன்னலமற்று தொடர்ந்து சேவை செய்து வரும் தன்னிகரற்ற அனைத்து மின் வாரிய தொழிலாளர்களுக்கும் அலுவலர்களுக்கும் இந்த நேரத்தில் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றார்.
விழாவில் அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி, எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, எரிசக்தி துறையில் கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, மின் பகிர்மான கழகத் தலைவர் ராஜேஷ் லக்கானி, கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், மின் பகிர்மான இயக்குனர் சிவலிங்க ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.