மே.29.
பிரசித்தி பெற்ற கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழா கம்பம் நடுதலுடன் துவங்கியது. கரூர் பாலம்மாள் புரத்தில் இருந்து பாரம்பரிய முறைப்படி கம்பம் கொண்டுவரப்பட்டு கோவிலில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மாலை அமராவதி ஆற்றில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கம்பம் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது. கோவிலை அடைந்ததும் கோவிலில் கம்பம் நடப்பட்டது.
நாள்தோறும் பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு செய்துவந்தனர். 17ம் தேதி (வெள்ளி) பூச்செரிதல் விழா நடைபெற்றது. 16 17 ம் தேதிகளில் மகா சண்டியாக பெருவிழா, 19ம் தேதி காப்பு கட்டுதல், 27ம் தேதி திருத்தேர் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் 27, 28, 29 ம்தேதிகளில் அக்னிசட்டி எடுத்தல், அலகு குத்துதல், பால்குடம், மாவிளக்கு எடுத்து நேர்த்திக் கடன் நிறைவேற்றி வழிபட்டனர். முக்கிய விழாவான ஆற்றுக்கு அனுப்பும் விழா இன்று மாலை (புதன்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது.
சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கோவிலில் இருந்து கம்பம் எடுக்கப்பட்டு அலங்கார ரதத்தில் கொண்டுவரப்பட்டது. வழிநெடுக பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அமராவதி ஆற்றுக்கு வந்ததும் அங்கு ஆற்றில் கம்பம் விடப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியான இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரமாண்ட வாண வேடிக்கை நடைபெற்றது. கம்பம் விடும் விழாவையொட்டி கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் அரசு விடுமுறை விடப்பட்டிருந்தது.