ஜன.31.
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், உங்களில் ஒருவன் பதில்கள் பகுதியில் கேட்கப்பட்டிருந்த பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார். அதில்,
ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த நீங்கள் அவர் கொடுத்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளலாமா? இது பின்வாங்கல் இல்லையா? என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
அதற்கு முதல்வர் ஸ்டாலின், “ஆளுநருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்படவில்லை. அன்று அவர் படித்தது அரசின் உரை. ஆகவே அரசின் சார்பில் தயாரிக்கப்பட்ட உரையை எந்த மாற்றமும் இல்லாமல் அவைக்குறிப்பில் இடம் பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய தீர்மானம்.
அத்தீர்மானம் ஏற்கப்பட்டு – அவையின் மாண்பும் மக்களாட்சித் தத்துவமும் நிலைநாட்டப்பட்டது. சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்குப் பதிலளித்து நான் பேசியபோது, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் மாண்பைக் காக்கவும், மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆட்சியின் வலிமையை உணர்த்தவும், நூற்றாண்டைக் கடந்த இந்த சட்டமன்றத்தின் விழுமியங்களைப் போற்றவும் நான் என்னுடைய சக்தியை மீறியும் செயல்படுவேன்” என்று குறிப்பிட்டேன். அதைத்தான் இப்போதும் உங்களுக்கு பதிலாக சொல்ல விரும்புறேன்.எனவே, குடியரசு நாள் தேநீர் விருந்து என்பது காலம் காலமாக இருக்கின்ற நடைமுறை மரபு. குடியரசு நாளன்று அதில் பங்கேற்றது மக்களாட்சியின் மாண்பைக் காப்பதற்கான பண்பே தவிர, இதில் அரசியல் பின்வாங்கலும் இல்லை, முன்வாங்கலும் இல்லை, எந்த சமரசமும் இல்லை” என்று பதிலளித்துள்ளார்.