அக்.18.
கடந்த 2018 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பொதுமக்கள் போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். 13 பேர் கொல்லப்பட்டனர் இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையத்தின் அறிக்கை தமிழக அரசிடம் வழங்கப்பட்டது. இன்று சட்டப்பேரவையில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது அதில்,
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தின் போது வன்முறை ஏற்படும் என எஸ் பிக்கு மாநில சி. ஐ. டி. துறை தகவல் அனுப்பியது. டிஐஜி, ஐஜி ஆகியோர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அது மட்டும் இன்றி அப்போதைய உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி அப்போதைய முதலமைச்சரை (எடப்பாடி பழனிச்சாமி) சந்தித்து , மீன்பிடி தடைக்கலமாக இருப்பதால் மீனவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதை தடுக்கும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியத்தை கூறினார். இதுதொடர்பாக முதல்வர் எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உயிரிழப்புகள் சொத்துக்கள் அழிக்கப்பட்டது போன்ற சம்பவங்கள் நடைபெறும் வரை சிஐடி அறிக்கை எனக்கு தெரியாது என்று கலெக்டர் சாட்சியத்தில் கூறியிருப்பது முற்றிலும் வியப்பை ஏற்படுத்துகிறது மே 13 முதல் 22 ஆம் தேதி வரை படிப்படியான யுக்திகளை கையாண்டு குழப்பம் விளைவித்தவர்களை கைது செய்திருந்தால் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வேண்டும் என்ற முயற்சி நடந்து இருக்காது. அதை முறியடிக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
பொறுப்பற்ற கலெக்டர்- ஐஜி- டி ஐ ஜி
காவல்துறையின் குறைபாடு மாவட்ட நிர்வாகத்தின் செயலின்மை அலட்சியம் என்பது தெளிவாக தெரிகிறது. துப்பாக்கி சூட்டுக்கு முன்னதாக பொதுமக்கள் கூடவோ, ஊர்வலமாக செல்லவோகூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தும் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டதா என்பது கேள்விக்குறியே.
காவல்துறை செய்ய வேண்டியவை செய்யாமலும் செய்யத் தகாதவற்றை செய்தும் இருக்கிறது. 17 காவல்துறை அலுவலர்கள் மீதும் தூத்துக்குடி அப்போதைய கலெக்டர் 3 வருவாய் துறை அலுவலர்கள் மீதும் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, காயம் அடைந்தவர்களுக்கு ரூ. பத்து லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது, மாவட்ட ஆட்சியராக இருந்தவர் மீது நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை செய்கிறது. உயிரிழப்பு படுகாயமோ ஏற்படும் என தெரிந்தே காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். தடை உத்தரவு பிறப்பித்து விட்டபின்னர் ஒரு பள்ளியில் கூடுவதற்கு அனுமதி அளித்ததால் தான் ஸ்டெர்லைட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்காக ஆயிரக்கணக்கானோர் கூடிவிட்டனர். தடைவுத்தரவினை மீறும் சூழ்நிலையை மாவட்ட நிர்வாகமே ஏற்படுத்தி விட்டது. விசாரணையில் தடை உத்தரவு பிறப்பித்தது தெரியாது என்று கலெக்டர் கூறியுள்ளார்.
படித்த இளைஞர்களை குறிவைத்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சீருடை அணிந்த மற்றும் அணியாத காவலர்கள் வீட்டிற்குள் நுழைந்து கைது செய்யப்பட்டவர்கள் எந்த குற்றமும் செய்யவில்லை எனவிளக்கம் கூற முற்பட்டும் தாக்கியுள்ளனர். கலெக்டர் அலுவலக வளாகத்தின் உள்ளேயும் வெளியேயும் திரேஷ் புரத்திலும் நடந்த துப்பாக்கி சூட்டில் 12 பேர் இறந்துள்ளனர் . அதில் ஒருவர் துப்பாக்கி சூடு காயத்தாலும் மிதிபட்டு நசுங்கியதாலும் இறந்திருக்கிறார்.
12 நபர்கள் 108 ஆம்புலன்ஸில் கொண்டு வரப்படவில்லை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் நல்லதம்பி தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்டுள்ளனர். காயங்களோடு தப்பியவர்கள் தனியார் ஆம்புலன்ஸில் தான் வந்தார்கள் தவிர 108 ஆம்புலன்ஸில் கொண்டுவரப்படவில்லை. உதவி செய்ய யாரும் இல்லா நிலையில் போலீஸ் வருவாய் துறை மற்றும் அரசு இயந்திரம் முற்றிலும் பார்வையாளராக இருந்த நேரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் புரிந்த மனிதாபிமான சேவைகள் பாராட்டுக்குரியவை. ஐ ஜி சைலேஷ்குமார் யாதவ் கலெக்டர் அலுவலகத்தில் நுழைந்தபோது போராட்டக்காரர்கள் கற்களை எறிந்தனர் . காவல்துறையினர் அவர்களை துரத்த மற்றொரு கூட்டத்துடன் சேர்ந்து காவல்துறையினர் மீது கற்களை எறிந்தனர். அப்போது டிஐஜி அறிவுரையின்படி கன்மேன் சங்கர் ஐந்து முறை பிஸ்டலில் சுட்டார் ஆய்வாளர் ரென்னிஸ் பிஸ்டலுடன் ஓடிக்கொண்டு போராட்டக்காரர்களை சுட்டார். டிஐஜி பொறுப்பில்லாமல் மனம் போன போக்கில் செயல்பட்டுள்ளார். போராட்டக்காரர்களை காட்டில் வேட்டையாடுவது போல காவலர் சுடலை கண்ணு துப்பாக்கியால் சுட்டு உள்ளார். அவர் பயன்படுத்திய துப்பாக்கியில் மேலும் தோட்டாக்கள் இருந்திருந்தால் பல விலை மதிப்பற்ற உயிர்களை இழக்க நேரிட்டிருக்கும் புத்தி சுவாதீனம் இல்லாதவர் போல இப்படி நடந்து கொள்வது அனுமதிக்கத்தக்கதல்ல. வேட்டைக்காரர்களைப் போல காவல்துறையினர் செயல்பட கூடாது. சத்தியமங்கலம் பயிற்சியில் கலந்து கொண்டதால் அப்படி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.