செப்.28.
மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்ய பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றங்களை அணுகிவந்த நிலையில் பொதுமக்களின் நலன் கருதி திட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. போலி ஆள்மாறாட்டம் போன்ற காரணங்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை பதிவுத்துறை ரத்து செய்ய அதிகாரம் அளிக்க தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். திருத்தப்பட்ட இந்த பதிவு சட்டத்தில் போலி ஆவணங்கள் விதிகளின்படி ஆவணங்கள் மற்றும் சட்டத்தால் தடை செய்யப்பட்ட ஆவணங்களின் பதிவினை மறுக்க பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. புகார் மனுவை பெரும் மாவட்ட பதிவாளர் மனுதாரர் எதிர் மனுதாரர்களை விசாரித்து ஆவணம் போலி என கண்டறியப்பட்டால் அந்த ஆவணத்தை ரத்து செய்து ஆணையிட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆணை மீது பதிவுத் துறை தலைவரிடம் ஒரு மாதத்திற்கு மேல்முறையீடு செய்யலாம்.
மேலும் முறையாக பரிசீலிக்காமல் உள்நோக்கத்துடன் போலி ஆவணத்தை பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட ஆவணதாரர்கள் மற்றும் பதிவு அலுவலர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து சிறை தண்டனை வழங்கப்படும். நில அபகரிப்பு மோசடியாளர்களால் பாதிக்கப்பட்ட சொத்தின் உண்மையான உரிமையாளர்களுக்கு சொத்தை மீட்டுக் கொடுக்கும் வகையில் மோசடி பதிவுகளை மாவட்ட பதிவாளர் ரத்து செய்ய பதிவு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
போலி ஆவண பதிவால் பாதிக்கப்பட்ட உண்மையான சொத்து உரிமையாளர்கள் ஐந்து நபர்களுக்கு அவர்களின் சொத்துக்கள் ஆவணங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க . ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.
தட்கல் முறையில் டோக்கன்
பொதுமக்கள் தங்களின் ஆவணங்களை நல்ல நாட்கள் என கருதப்படும் குறிப்பிட்ட நாட்களில் பதிவு செய்ய விரும்புகின்றனர். அதிக ஆவணங்கள் பதிவாகும் அலுவலகங்களில் டோக்கன் கிடைப்பதில் ஏற்படும் சிரமத்தை போக்க, அன்றே ஆவணம் பதியப்பட வேண்டும் என விரும்புவோர் இணைய வழியாக ரூ. ஐந்தாயிரம் செலுத்தி உடனடியாக தட்கல் டோக்கன் பெறும் வசதி துக்கி வைக்கப்பட்டது. அவசர ஆவண பதிவு தேவைப்படும் நிகழ்வுகளிலும் இவ்வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
திருமண சான்றிதழ் இணைய வழியில் திருத்தம்
திருமண பதிவுச் சட்டங்களின் கீழ் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. பின்னாளில் கடவுச்சீட்டு ( பாஸ்போர்ட் )மற்றும் வெளிநாடு செல்ல விசா கோரி விண்ணப்பிக்கும் போது சில சமயங்களில் பெயர்களில் ஏற்படும் பிழைகள் முகவரி போன்றவற்றில் திருத்தம் தேவைப்படுகிறது. இவ்வாறு திருத்தம் செய்ய இணைய வழியில் விண்ணப்பித்து திருத்தப்பட்ட திருமண பதிவு சான்றிதழ் பெறுகின்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை. விரும்பிய நேரத்தில் எந்த இடத்திலும் இணையவழி விண்ணப்பம் செய்யலாம். உரிய திருத்தம் செய்யப்பட்ட திருமண சான்றிதழ் பதிவு அலுவலரின் மின் கையப்பத்துடன் பயனாளிக்கு இணைய வழியாக அனுப்பப்படும். பதிவாளர் மின் கையொப்பத்துடன் கூடிய இந்த சான்றிதழை விண்ணப்பதாரர் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் .
இந்நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு, பதிவு துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி , பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் கலந்து கொண்டனர்.