ஜன.5.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவை டெல்லியில் சந்தித்து தமிழக மருத்துவத்துறை தொடர்பான கோரிக்கை கடிதம் வழங்கினார். அதில் கூறி இருப்பது-
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுடன் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள நீட் சட்ட முன் வடிவுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று தர கோருதல். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து நிறுவ வேண்டும். கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க அனுமதி அளிக்க வேண்டும். 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவுதல். தமிழ்நாட்டில் உள்ள 30 அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிய அரசு செவிலியர் கல்லூரி நிறுவுதல், உக்ரைனில் படித்த மாணவர்கள் இந்தியாவில் மருத்துவ கல்லூரியில் படிப்பை தொடர வழிவகை காண வேண்டும். மருத்துவ பட்ட மேற்படிப்பு கல்வி வரைவு ஒழுங்குமுறை விதிகளுக்கு ஆட்சேபனை தெரிவிப்பது.
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி மருந்து கூடுதலாக வழங்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு 15 ஆவது நிதி ஆணையம் ஒப்புதல் அளித்த நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். அனைத்திந்திய ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாமல் உள்ள எம்பிபிஎஸ் இடங்களை மாநிலத்திற்கு ஒப்படைக்க வேண்டும். தமிழ்நாட்டில் 50 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களை ஏற்படுத்த ஒப்புதல் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் செந்தில்குமார், தமிழ்நாடு இல்லம் முதன்மை செயலாளர் ஆஷிஸ்சாட்டர்ஜி மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.