ஆக.19.
புதிய தலைமை செயலாளர் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு அரசின் 50-வது தலைமைச் செயலராக முதல்வரின் செயலர்களில் ஒருவரான நா.முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு ஐ.ஏ.எஸ் அதிகாரியான முருகானந்தம் சென்னையைச் சேர்ந்தவர். பொறியியல் மற்றும் எம்.பி.ஏ பட்டதாரி. 1991 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தார். கரூர் மற்றும் கோவை மாவட்டங்களில் கலெக்டராக பணியாற்றினார்.
மேலும், ஊரக வளர்ச்சித் துறையின் இணைச் செயலர், டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையர், தொழில் துறை, நிதித் துறைகளின் செயலர் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் தொழிற்துறையின் முதன்மைச் செயலாளராக பொறுப்பு வகித்தார்.
தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் முருகானந்தம் ஐ.ஏ.எஸ் நிதித்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போது நிதித்துறை அமைச்சராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல் ராஜனின் பாராட்டை பெற்று தற்போது கூடுதல் தலைமைச் செயலர் பொறுப்பில் முதல்வரின் தனி பிரிவுச் செயலர் 1 ஆக பணியில் இருந்து தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பொறுப்பு புதிதாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.