டிச.26.
கரூர் முத்துக்குமார் சாமி பேருந்து நிலையம் 1987 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. 35 ஆண்டுகளாக உள்ள இந்த பஸ் நிலையத்தை மாற்ற வேண்டும்என்பது பொதுமக்களின் நீண்டகால கோரிக்கை. பழைய பஸ் நிலையத்தில் பொதுமக்கள் நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். தற்போது முத்துக்குமாரசாமி பேருந்து நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கரூர் மாநகராட்சி திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு .க.ஸ்டாலின் உத்தரவிட்டு கரூரில் நடைபெற்ற அரசு விழாவில் அடிக்கல் நாட்டினார். திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலையம் ரூ 40 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ளது.
கரூர் மாநகராட்சி பகுதியில் அரசு நலத்திட்ட பணிகளை மின்சாரம் மதுவிலக்கு ஆயத் தீர்வைகள் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பல்வேறு இடங்களில் இன்று துவக்கி வைத்தார். அப்போது புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
கரூர் திருமாநிலையூர் பகுதியில் அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் 10 மாதங்களுக்குள் நிறைவடையும். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டப்பட உள்ளது. புதிய பேருந்து நிலையமானது புறநகர் பேருந்து நிலையமாகவும், கரூர் நகரில் உள்ள பேருந்து நிலையம் நகர பேருந்து நிலையமாக செயல்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், எம் எல் ஏக்கள் மொஞ்சனூர் இளங்கோ, மாணிக்கம், சிவகாமசுந்தரி, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.