பிப்.14.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் வீரப்பன்சத்திரம் பகுதியில் கரூர் மாவட்ட நிர்வாகிகளுடன் முகாமிட்டு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான செந்தில் பாலாஜி வாக்கு சேகரித்து வருகிறார். தேர்தல் களத்தில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தனியார் தொலைக்காட்சிக்கு செந்தில் பாலாஜி அளித்த பேட்டி-
ஜி. கே. வாசன் நல்ல தலைவர் தான். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே அவர்கள் கட்சி தான் போட்டியிட்டது. அவரே போட்டியிட்டு இருக்கலாம். ஏன் விட்டுக் கொடுத்தார்?. சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் , டீசல் விலைகளை குறைக்க சொல்லி பாராளுமன்றத்தில் வலியுறுத்தி இருக்கலாம். விலையை குறைப்பதற்கு முயற்சி எடுத்து இருக்கலாம்.
பொதுவாக என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று பேசிக்கொண்டுள்ளனர். அனைத்து மகளிர்க்கும் செல் போன்- சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என ஏராளமான வாக்குறுதிகளை நிறைவேற்றாத எடப்பாடி பழனிச்சாமி, மேடைக்கு மேடை திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறுகிறார்.
கொரோனா கால நிவாரண நிதி- மகளிர்க்கு விலையில்லா பேருந்து பயணத் திட்டம் – இல்லம் தேடி கல்வி- அரசு பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை- மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் – மக்களை தேடி மருத்துவம் – உயிர்காக்கும் மருத்துவ திட்டம் என சொல்லிக் கொண்டே போகலாம். ஒன்றரை ஆண்டுகளில் 85 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது இந்த அரசு.
மூன்று மணி நேரம் நீங்கள் தேர்வு எழுதுகிறீர்கள். 15 நிமிடத்தில் வந்து ஏன் இன்னும் தேர்வு எழுதி முடிக்கவில்லை என்று கேட்பது எப்படியோ அப்படித்தான் இவர்களது குற்றச்சாட்டும் இருக்கிறது. இன்னும் மூன்றரை ஆண்டு காலம் இருக்கிறது. மீதமுள்ள 15 சதவீத வாக்குறுதிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார் . எடப்பாடியின் கருத்துக்களை ஏற்பதற்கு மக்கள் தயாராக இல்லை .
அதேபோல் சிவி சண்முகம் 40,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். நாங்களா வாக்காளர்களை சேர்த்தோம். 2021 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் தான் இது. எப்படி இது பற்றி கூற அருகதை- தகுதி அவருக்கு இருக்கிறது?. அவர்கள் ஆட்சியை அவரே குறை சொல்கிறாரா?. தொடர்ந்து பொய் புகார்களை கொடுக்க ஆரம்பிவிட்டனர். இதை பார்த்தால் அவர்களது தோல்வி உறுதியாகிவிட்டது. அதிமுக வேட்பாளரை வரவேற்க மக்கள் தயாராக இல்லை. விரக்தியின் உச்சம் தான் அவர்கள் அளிக்கும் புகார்கள். இந்த ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் காங்கிரஸ் வேட்பாளர் ஈ. வி கே எஸ் இளங்கோவனுக்கு ஆதரவு பெருகி வருகிறது என்றார்.