நவ.21.
கரூர் மாநகராட்சி, மண்டலம் || வார்டு எண்-34ல் நடைபெற்று வரும் காமராஜர் தினசரி காய்கறி சந்தை கட்டுமானப் பணிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று பார்வையிட்டார். கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்விற்குப்பின் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்ததாவது-.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்திவருகிறார்கள். கரூர் காமராஜ் தினசரி காய்கறி சந்தை வணிகர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த காய்கறி சந்தையை மேம்படுத்துவதற்காக கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.6.75 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து, சுமார் 3955.00 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டுமானப்பணிகள் துவக்கப்பட்டது.
இன்றைய தினம் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கரூர் மாநகரின் அடையாளங்களில் ஒன்றான 78-வருட பழமையான காமாராஜ் தினசரி சந்தையை மேம்பாட்டு பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. இக்காய்கறி சந்தையில் 134 காய்கறி மற்றும் பழக்கடைகள் மற்றும் 25 மளிகை கடைகள் என மொத்தம் 160 கடைகள் அமைக்கப்படவுள்ளது. காய்கறி மற்றும் பழக்கடைகள் 10 × 8 என்ற அளவிலும் மற்றும் மளிகை கடைகள் 10×10 என்ற அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் 74 சதவீதம் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் வருகின்ற டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதே போன்று கரூர் மாவட்டத்தில் புதிய பேருந்துநிலையம், நூலகம், மகளிர் தங்கும் விடுதி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு மின்சார வாரியத்தை பொறுத்த வரையில் அதானி நிறுவனத்துடன் எந்தவிதமான வணிகரீதியான ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. தமிழ்நாட்டின் மின் தேவையை கருத்தில் கொண்டு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைக்கேற்ப திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒன்றிய அரசின் மின்சார துறையிடமிருந்து 1500 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்துடன் தான் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது. குறிப்பாக சோலார் எனர்ஜி கார்பரேசன் ஆஃப் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம் தான். மற்ற மாநிலங்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்வார்கள்.
அந்த வகையில் தான் தமிழ்நாடு மின்சார வாரியம் அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு சுமார் 1500 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அதுவும் மிக குறைந்த விலையில் ஒரு யூனிட் ரூ.2.61 பைசா என்ற அளவில் மிக மிக குறைந்த விலையில் பெறுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதே போல் மின்னகம் செயலி மூலம் வரப்பெற்ற புகார்களுக்கு எறக்குறைய 95 சதவீதம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள புகார்களுக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தி விரைவாக நடைபெற்று கொண்டு வருகின்றன. தற்போது மின் உற்பத்திக்கு தேவையான அளவு தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் நிலக்கரி போதுமான அளவு கையிருப்பு உள்ளது.
அமராவதி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட மேலப்பாளையம் உயர்மட்ட பாலத்திற்கு இணைப்பு சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் அரசுக்கு கருத்துரு தயார் செய்யப்பட்டு விரைவில் அப்பணிகள் துவங்கப்படவுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி மேயர் வெ.கவிதா. மாநகராட்சி ஆணையாளர் சுதா. துணை மேயர் ப.சரவணன், மண்டலக் குழுத் தலைவர்கள்.எஸ்.பிகனகராஜ், ஆர்.எஸ்.ராஜா, க.அன்பரசன். எஸ்.சக்திவேல் மாநகர நல அலுவலர் மரு.கௌரி சரவணன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.