ஏப்.12.
கரூரில் 6.7 கோடி மதிப்பிலான குடிநீர் திட்ட பணிகளை தொடங்கி, முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் வி.செந்தில்பாலாஜி திறந்து வைத்தார்.
கரூர் மாநகராட்சி பகுதி மற்றும் ஆண்டாங் கோவில் பகுதிகளில் புதிய குடிநீர் திட்ட பணிகளை மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் வளர்ச்சி திட்ட பணிகளையும் நிதியையும் வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் குறிப்பாக கரூர் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டம், தார் சாலை, வடிகால் வசதி என திட்டங்களை வழங்கி வருகிறார்கள். கரூர் மாநகராட்சி பகுதியில் ரூ. 92 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்ட பணிகள் நடப்பு சட்டமன்ற பேரவை தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. பணிகளை தொடங்க நிர்வாகம் தயாராகி வருகிறது. கரூர் மாநகராட்சியில் மொத்தம் 579கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்துவது, ரூ. 113 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணிகளை மேற்கொள்வது போன்ற பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. தற்போது குடிநீர் மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.5 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. மாநகராட்சி பகுதிகளில் 7 முதல் 9நாட்கள் வரை இடைவெளியில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது . இப்பணிகள் முடிவடையும் போது மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
கரூர் திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலையம் பணிகள் 50% நிறைவு பெற்றுள்ளது. தற்போது நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மூன்று முதல் நான்கு மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும். கால தாமதத்திற்கு யார் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்கள் எதையும் செய்யவில்லை. அடுத்தவர்கள் செய்வதையும் செய்யவிடாமல் தடுக்கின்ற வேலையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். ஒவ்வொருமுறையும் நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்று நாங்கள் பணிகளை தொடர்ந்து வருகிறோம். குறுகிய மனப்பான்மையுடன் வளர்ச்சி பணிகளை தடுக்கின்றனர்
திருவள்ளூர் மைதானத்தில் போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களின் வசதிக்காக புதிய நூலகம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. அதற்கும் தடை ஏற்படுத்தினார்கள். தற்போது அந்தப் பணிகளும் தொடங்க இருக்கிறது.
அமராவதி ஆற்றில் வெள்ளம் வரும்போது உபரி நீரை பயன்படுத்தும் வகையில் ரூ. 10 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும்.
நெரூர் மற்றும் மருதூர் பகுதியில் காவிரி ஆற்றில் தடுப்பணைகள் கட்டும் திட்டம் நடைபெற இருக்கிறது. கோயம்பள்ளி – மேலப்பாளையம் பாலம் இணைப்புச்சாலைக்கு என தனியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் பாலம் திறந்து வைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார். கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ, சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மண்டல குழு தலைவர்கள் எஸ்பி கனகராஜ், கோல்ட் ஸ்பாட் ராஜா, சக்திவேல், மாநகராட்சி ஆணையர் சுதா ஆகியோர் உடன் இருந்தனர்.