அக்.16.
இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழில் முனைவோர்களுக்கு அரசு மானியத்துடன் கடனுதவி வழங்குதல், தொழில் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் ஏற்றுமதி கருத்தரங்கம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில், கரூரில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 100 தொழில் முனைவோர்களுக்கு ரூபாய் 34.01 கோடி திட்ட மதிப்பீட்டில் ரூபாய் 8.18 கோடி அரசு மானியத்துடன் கூடிய கடன் ஒப்புதல் ஆணை,
அரசினர் தொழில் பயிற்சி மையம் மற்றும் அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்காக தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், தொழில் நிறுவனங்களுக்கு ஒரு முனையில் புதிய உரிமங்கள் “ஒற்றை சாளர கண்காணிப்பு” இணைய முகவை, தொழிற்சாலையில் மின் நுகர்வை சிக்கனமாக பயன்படுத்த மின்சாரத்தை சேமித்தல் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு கருத்தரங்கு ஆகியவற்றையும் துவக்கி வைத்தார்.
இக்கூட்டத்தில் தமிழக மின் வாரியத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானி, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, வங்கியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், நிபுணர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியது-
கரூரில் சாயப்பட்டறை பூங்கா 100% உறுதியாக அமைக்கப்படும்.
25 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு கூட்ட அரங்கம், 13 கோடி மதிப்பீட்டில் புதிய மீன் மார்க்கெட், 31 கோடி மதிப்பில் காய்கறி வணிக வளாகம் வைப்பதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.
மேலும், புதிய பூங்காக்கள், திருமண மண்டபங்கள் அமைக்கப்படும் என தேர்தலில் வாக்குறுதி அளித்தது நிறைவேற்றப்படும்.
கரூர் தயாரிப்புகளை “கரூர் பிராண்ட்” என்ற அடிப்படையில் வெளி உலகத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் கட்டமைப்புகளை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகத்திற்கு தேவைக்கும், உற்பத்திக்கும் இடையே 2,500 மெகாவாட் இடைவெளி உள்ளது. இதை சரி செய்ய முதல்வருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறைந்த விலையில் மின்சாரத்தை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தபட்ட நிலையில் ஒரு சிலர் வரி இனங்கள் உயரும் என தவறான தகவல் பரப்பி வருகின்றனர். 1 பைசா கூட வரி உயர்வு இருக்காது. தமிழகம் முழுவதும் வரி உயர்வு தொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுக்கும் போதுதான் உயர வாய்ப்பு உள்ளது. அதுவரை உயராது.
கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.