டிச.21.
கரூர் ஆயுர்வேத மருத்துவர்கள் நலச்சங்கம் நடத்தும் ‘ஆயுர்மேளா 2024 – மாபெரும் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் மற்றும் மருத்துவ கண்காட்சியை’ இன்று கரூர் சரஸ்வதி வெங்கட்ராமன் மஹாலில் அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கொண்டு, டிசம்பர் 21 மற்றும் 22 தேதிகளில் நடைபெறும் இந்த முகாமில் கலந்துக் கொண்டு பொதுமக்கள் தக்க ஆலோசனைகள் பெற்று பயன்பெறலாம்.
கரூர் மாவட்ட ஆயுர்வேத மருத்துவர்கள் நலச் சங்கம் சார்பில் ஆயுர்வேத மேளா கண்காட்சியை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்து பார்வையிட்டார். வாழ்நாள் சாதனையாளர் விருது டாக்டர்கள் சிதம்பரம், தனசீலன் ஆகியோருக்கு வழங்கி நூல் வெளியிட்டு பேசினார். இந்த மருத்துவ மேளாவில் ஆயுர்வேத மருத்துவ இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. சென்னை ஆயுர்வேத மருத்துவ நிபுணர் பாலமுருகன் மொழிபெயர்த்த அக்னி வேஸரின் அஞ்சன நிதாநம் என்ற நூலை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார். கரூரில், படுக்கை வசதியுடன் கூடிய ஆயுர்வேத மருத்துவமனை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றது ஆவன செய்யப்படும் என அமைச்சர் பேசும்போது குறிப்பிட்டார்.
கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ, டிஆர்ஓ கண்ணன், டாக்டர் மாதவன் விஎன்சி பாஸ்கர், நாரத கான சபா தலைவர் சூரிய நாராயணா, துணை மேயர் தாரணி சரவணன், மண்டல குழு தலைவர்கள் எஸ் பி. கனகராஜ், ஆர்.எஸ்.ராஜா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிவராமன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.