நவ.19.
கரூரில் இன்று அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சிறப்புரையாற்றினார். கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் முன்னிலை வகித்து பேசினார். எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உள்ளிட்ட கூட்டுறவு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, நலத்திட்ட உதவிகள் சிறந்த சங்கங்களுக்கும் நிர்வாகிகளுக்கும் பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசியது-
கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினர்கள் அதிக அளவில் இப்போதுதான் சேர்க்கப்பட்டுள்ளனர் .ஆட்சி மாறியதற்கு பின்னர் காட்சிகள் மாறிவிட்டன. யாராக இருந்தாலும் எந்த கட்சியாக இருந்தாலும் உறுப்பினர்களாக சேர்க்க உத்தரவிடப்பட்டது. அதுமட்டுமின்றி ஏறத்தாழ இன்றைக்கு 7 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டதுடன் புதிய உறுப்பினர்களுக்கு 2000 கோடி அளவிற்கு கடன் வழங்க இலக்கு வைக்கப்படுள்ளது.
நிலம் அற்றவர்களும் கால்நடை பராமரிப்புக்காக கடன் பெறலாம் என்ற திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முதலாக கொண்டு வந்தது நமது தளபதிஅரசு தான். கரூர் மாவட்டத்தில் மட்டும் கால்நடை பராமரிப்பு கடன் திட்டத்தில் ரூ. 60 கோடி கடன் வழங்கப்பட்டது.
அதிமுக ஆட்சியில் ரூ.9200 கோடி கூட்டுறவு கடன் வழங்கப்பட்டது. அதுவும் எப்படி என்றால் தேர்தலுக்காக கூட்டுறவு கடன் தள்ளுபடி என அறிவித்து நகைக்கடனுக்காக லட்சக்கணக்கான பேருக்கு வழங்கினர். அப்படி இருந்தும் இந்த தொகை தான் கடன் கொடுக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் அப்படியெல்லாம் இல்லாமல், கடந்த ஆண்டு ரூ. 10,273கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டி இல்லாமல் கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்கப்படும்.
. கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்து விட்டார்கள், நகைக்கடனை தள்ளுபடி செய்து விட்டார்கள். சுய உதவி குழுக்கள் கடன்களை தள்ளுபடி செய்து விட்டார்கள். இந்த அரசு எப்படி கூட்டுறவு சங்கங்களை நடத்தும் என எதிர் கட்சியினர் கேள்வி எழுப்பினார்கள் . நாங்கள் அதை பற்றி கவலைப்படவில்லை பொதுமக்கள் அதிக அளவில் டெபாசிட் செய்து கொண்டிருக்கின்றனர். பொதுமக்கள் வைப்பு நிதி 66,000 கோடியாக இருக்கிறது. மேலும் நம்பிக்கை வைத்து செலுத்துவதால் டெபாசிட் தொகை லட்சம் கோடிக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. கூட்டுறவுத்துறை மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கு சுய உதவி குழுக்களுக்கு அதிக அளவில் கடன்களை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளோம் என்றார்.