பிப்.3.
கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு திருவிழா நடைபெற்றது. நூற்றாண்டு விழா, நூற்றாண்டு நினைவுத்தூன் பணிகள் தொடக்க விழா ஆசிரியர் பெருமக்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கரூர் மாவட்ட கலெக்டர் மீ. தங்கவேல் தலைமை வகித்து பேசினார். எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், தொழிலதிபர்கள் விஎன்சி பாஸ்கர், அட்லஸ் நாச்சிமுத்து, மாநகராட்சி ஆணையர் சுதா, ஜி. சிவராமன் முன்னிலை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ரேவதி நன்றியுரை கூறினார்.
நூற்றாண்டு நினைவுத்தூண் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டியும், முன்னாள் இந்நாள் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கியும் மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி சிறப்புரையாற்றினார் . அமைச்சர் பேசியதாவது-
கரூர் நகரின், கரூர் மக்களின் இதயம் தான் கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.. நான் படித்த பள்ளி.. கரூர் மாவட்ட கல்வி புரட்சியின் கல்வெட்டு. நூறு ஆண்டுக்கு மேல் ஒரு பள்ளி உயர்ந்து நிற்கிறது என்றால், இதற்கு பின்னால் எத்தனை ஆயிரம் ஆசிரியப் பெருமக்களின் உழைப்பும், முயற்சியும் தியாகமும் இருக்கும்.
என் வாழ்நாளில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியாக கருதுகிறேன். மூன்று தலைமுறைகள் அமர்ந்திருக்கிறோம். அரசு அதிகாரிகளாக, நீதிபதிகளாக, வழக்கறிஞர்கள், தொழில் முனைவோர்கள் மருத்துவர்கள் ஆக ஆயிரக்கணக்கான ஆளுமைகளை உருவாக்கிய இந்த பள்ளியில் நானும் காலடி வைத்து கல்வியை பயின்றேன் என நினைக்கிற பொழுது இந்த பகுதியில் நான் செல்கின்ற பொழுது திரும்பி பார்க்காமல் செல்ல முடியாது. நாம் ஒரு உயர்ந்த நிலையை எட்டும் போது அதைப் பார்த்து மகிழ்ச்சி அடைவது ஆசிரியர்கள் தான். படிக்கும்போது ஆசிரியர்கள் கண்டிப்புடன் இருந்ததை இப்பொழுது நினைத்து பார்க்கிறோம்..உலகத்தில் பொறாமைப்படாத ஒரு இனம் இருக்கிறது என்று சொன்னால் அது ஆசிரியர் இனம் தான் . உயர்ந்த நிலைக்குச் செல்லும் போது இவன் எனது மாணவன் அன்று பெருமைப்படக்கூடிய ஒருவர் ஆசிரியர் தான் வேறு யாரும் அது போல் இருக்க மாட்டார்கள். அவர்கள் வீட்டில் உள்ள குழந்தைகளைவிட மாணவ செல்வங்களிடம். தான் அதிகமாக நேரத்தை செலவிடுவார்கள் ஆசிரியர்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பள்ளி கல்வித்துறைக்கு பல்வேறு வரலாற்று சிறப்பு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 44 ஆயிரம் கோடி என வரலாற்றில் இல்லாத அளவுக்கு நிதியை ஒதுக்கி உள்ளார்கள். தமிழ்நாட்டில் உள்ள மாணவ செல்வங்கள் அனைவரும் முதலமைச்சர் அவர்கள் வரும்பொழுது அப்பா என்று அன்போடு அழைத்து நன்றியை காட்டுகிறார்கள். நான் முதல்வன்- காலை உணவு திட்டம் போன்றவை உலகத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் வகையில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்தியாவில் உயர் கல்வியில் தமிழ்நாடு தான் முதலிடம் என்கிற வரலாற்றுச் சாதனையை மஉருவாக்கியிருக்கிறார். விளையாட்டு துறையை மேம்படுத்த வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்தியாவிலேயே தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகரமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார். போட்டி தேர்வுக்கு தயார்படுத்திக் கொண்டிருக்கும் மாணவச் செல்வங்களுக்கு ஒரு சிறந்த நூலகம் வேண்டும் என்பதற்காக திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் பிரம்மாண்டமாக ஒரு நூலகம் அமைக்க பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதையும் ஒரு சிலர் பொறுத்துக் கொள்ள முடியாமல் நீதிமன்றத்திற்கு சென்றார்கள். அதிலும் நல்ல தீர்வு உருவாகும்.
கரூரில் ஐடி பார்க் தேர்வு செய்யும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. 200 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு அடுத்த கட்ட நிலையிலேயே பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்படி ஒவ்வொன்றாக நான்கு தொகுதிகளுக்கும் முதலமைச்சர் அவர்கள் பல்வேறு சிறப்பு திட்டங்களை தந்து இருக்கிறார். இன்னும் நிறைய வளர்ச்சி பணிகளை கொண்டு சேர்த்திட வேண்டுமென்றால் அரசும் மக்களும் இணைந்து சிறப்பாக கரம் கோர்த்து எடுத்துச் செல்வோம். பள்ளிக்கு ஒரு ஆடிட்டோரியம் கட்டப்படும் என்கிற உறுதியை தெரிவித்துக் கொள்கிறேன். நூற்றாண்டு விழாவில் கூடினோம் பேசினோம் கலைந்தோம் என்று இல்லாமல் தொடர்ந்து சந்திப்போம் செயல்படுவோம். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
கல்வி குழு தலைவர் வசுமதி பிரபு, மாநகராட்சி உறுப்பினர்கள் வளர்மதி சம்பத், ரமேஷ், ஸ்டீபன் பாபு, பன்னீர்செல்வம், விசாசண்முகம், விசா குணசேகரன் அப்னா தனபதி, கரூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளி வளாகத்தில் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டிருந்தது. அதில் மாணவர்கள் முன்னாள் மாணவர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.