டிச.25.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சேலம் தொகுதி எம்பி. எஸ்.ஆர். பார்த்திபன் நேரில் சந்தித்து சேலம் மற்றும் தமிழக மக்களின் நலனுக்காக நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ள கோரிக்கைகளை செயல்படுத்துமாறு கோரிக்கை மனு அளித்தார் அதில் கூறியிருப்பதாவது-
ரயில்வே கோட்டத்தின் தலைநகரமாக இருந்தும் சேலத்தில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு பகல் நேர ரயில் இல்லை. நீண்ட போராட்டத்திற்கு பிறகு திருச்சி -கரூர் ரயில் சேலம் வரை நீட்டிக்கப்பட்டது. இந்த ரயில்களுக்கு வெவ்வேறு எண்கள் உள்ளது. ரயிலை தேடும் போது பயணிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. திருச்சி செல்ல 3.30மணி நேரம் ஆகும் என்பதால் ரயிலில் கழிப்பறை வசதி இல்லாமல் பெண்கள், முதியோர் அவதிப்படுகின்றனர்.
மயிலாடுதுறை- திருச்சி பயணிகள் ரயில் காலை 6.30 மணிக்கு புறப்பட்டு 9 45 மணிக்கு திருச்சி வருகிறது. திருச்சி- கரூர்- சேலம் பாசஞ்சர் ரயில் திருச்சியில் இருந்து காலை 9. 50மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சேலத்தை சென்றடைகிறது.
இதேபோல சேலம் -கரூர் -திருச்சி பயணிகள் ரயில் சேலத்தில் இருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு மாலை 5:50 மணிக்கு திருச்சி சென்றடைகிறது. திருச்சி- மயிலாடுதுறை ரயில் திருச்சியில் இருந்து மாலை 6:15 மணிக்கு புறப்பட்டு இரவு 9:40 மணிக்கு மயிலாடுதுறையை அடைகிறது. எனவே இந்த ரயில்களை எளிதாக இணைத்தால் தஞ்சை, திருச்சி, கரூர், நாமக்கல் வழியாக மயிலாடுதுறை சேலம் விரைவு ரயிலாக இயக்கலாம்.
ரயில்களை இணைப்பதன் மூலம் சேலத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு பகல் நேர இணைப்பு கிடைக்கும். டெல்டா மாவட்டங்களுக்கு மேற்கு மாவட்ட இணைப்பையும் வழங்கும். எக்ஸ்பிரஸ் ரயில் என்பதால் பெட்டிகளில் கழிப்பறை வசதி இருக்கும். சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை ஆறு மாவட்டங்களின் பயணிகளுக்கு உதவியாக இருக்கும். தயவுசெய்து இதனை கருத்தில் கொண்டு ரயில்களை விரைவில் இணைக்க வேண்டும்.
நிறுத்தப்பட்ட வாரணாசி ரயிலை மீண்டும் இயக்குக
2020 ஆம் ஆண்டில் வடமத்திய ரயில்வே திருச்சியில் இருந்து சேலம் வழியாக வாரணாசிக்கு பிரயாக்ராஜ் வாராந்திர விரைவு ரயில் அறிவிக்கப்பட்டது. ஆனால் கோவிட் காரணமாக இது செயல்படுத்தப்படவில்லை. இந்த ரயிலை விரைவில் அறிமுகப்படுத்த வேண்டும். கரூர், சேலம் , ஜோலார்பேட்டை காட்பாடி , விஜயவாடா, பல் ஹர்ஷா, இடர்சி, மணிக்புர் வழியாக இயக்க வேண்டும்.
நிறுத்தப்பட்ட திருநெல்வேலி – ஜபல்பூர் ரயில் மீண்டும் இயக்க வேண்டும்
கோவிட்டுக்கு பிறகு இந்திய ரயில்வே பெரும்பாலான ரயில்களை இயக்கியும் கூட, சில முக்கிய ரயில்கள் இன்னும் இயக்கப்படவில்லை. அவற்றில் ஒன்று திருநெல்வேலி- ஜபல்பூர் சிறப்பு ரயில் 2018 முதல் 2020 வரை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டது . புதிய அமராவதி (தெலுங்கானா மாநில தலைநகர்), ஜபல்பூரை திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சேலம், போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களுடன் இணைக்கும் ஒரே ஒரு ரயில் இதுவாகும் . இந்த ரயில் தமிழ்நாட்டின் மிகவும் பழக்கமான மற்றும் பிரபலமான ரயில்.
தென் தமிழகத்திலிருந்து ஜபல்பூருக்கு செல்லும் ஒரே ரயில். அதிக பயணிகளை ஈர்க்கிறது என தரவுகளின் மூலம் தெரிய வருகிறது. 2019 பிப்ரவரியில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த ரயிலையும் ஜூலை 1 முதல் 2019 முதல் வழக்கமான ரயிலாக இயக்க வேண்டும் என வாரியம் முன்மொழிந்து ஒப்புதல் அளித்துள்ளது.
கேரளாவுக்கு உண்டு தமிழகத்துக்கு இல்லை
திருநெல்வேலி- ஜபல்பூர், கோவை -ஜபல்பூர் ரயில்கள் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. கோவிட்டுக்கு பிறகு கோவை- ஜபல்பூர் மீண்டும் இயக்கப்பட்டது. இது கேரளா வழியாக இயங்குகிறது . ஆனால் திருநெல்வேலி -ஜபல்பூர் ரயில் இன்னும் இயக்கப்படவில்லை . தமிழக முழுவதும் பயன்பெறும் வகையில் இந்த ரயிலை விரைவில் மீண்டும் இயக்க வேண்டும்.
சேலம் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தின் நலன் கருதி சென்னை- எழும்பூர்- சேலம் –சென்னை எழும்பூர் விரைவு ரயில் சேலம் சந்திப்பில் 15 மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இதை நாமக்கல் வழியாக கரூர் வரையில் நீட்டிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் .
நாமக்கலில் இருந்து பெரம்பலூர் துறையூர் வழியாக அரியலூர் புதிய ரயில் பாதை அமைக்கும் பணி ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு தமிழ்நாட்டில் இருந்து சார்ட் லைனுக்கு மாற்று வழி இணைப்பை வழங்கும். இதன் மூலம் சேலத்திலிருந்து பெரம்பலூர் அரியலூர் வரை ரயில் இணைப்பு கிடைக்கும் இந்த ரயில் பாதையானது பின்தங்கிய நாமக்கல் பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களில் வளர்ச்சியை அதிகரிக்கும். எனவே பாதையை அனுமதித்து திட்டத்தை விரைவில் முடிக்க கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.