பிப்.11.
கரூர் ஜங்ஷன் ரயில் நிலையம் அம்ரித் திட்டத்தில் சேர்க்கப்பட்டு நவீனமயமாக்கப்பட உள்ளது .
கரூர் மாவட்டத்தின் தலைமையிடமான கரூரில் ஜங்ஷன் ரயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. நான்கு திசைகளிலும் ரயில் பாதை அமைக்கப்பட்டு பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 40க்கும் மேற்பட்ட ரயில்கள் கரூர் வழியாக சென்று வருகின்றன. கரூரில் இருந்து சென்னைக்கு நேரடியாக ரயில் விட வேண்டும். ரயில் பெட்டிகளை பராமரிக்கும் வசதியை கரூரில் ஏற்படுத்த வேண்டும். ஆகிய கோரிக்கைகள் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன. பயணிகள் அமர்ந்து சாப்பிடும் கேண்டின் வசதி, போதுமான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி செய்யப்பட வேண்டும் என்பதும், நான்கு ATM இயங்கி வந்த நிலையில் தற்போது ஏடிஎம் வசதி இல்லை. வெளியூர் பயணம் செல்பவர்கள் தவிர தொழில் நகரமான கரூருக்கு வேலைக்காகவே தினமும் ஆயிரக்கணக்கானோர் ரயில்களில் வந்து செல்கின்றனர் . கழிவறைகளே இல்லாத டெமோ ரயில்களை மாற்றி பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என்பதும் தொடர்ந்து எழுப்பப்படும் கோரிக்கைகள் ஆகும் .
இந்நிலையில் ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் அம்ரித் திட்டத்தில் கரூர் ரயில் நிலையமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து அம்ரித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 60 நிலையங்களில் கரூர் ரயில் நிலையமும் ஒன்று. ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் இத்திட்டத்தை செயல்படுத்தும் போது ரூ.10 முதல் 20கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் கரூர் ரயில் நிலையத்தில் நடைமேடை நீளத்தை அதிகப்படுத்துதல், இலவச வை- பை இணைய வசதி, நவீன உணவகம், சாலை மற்றும் பயணிகள் தங்கும் வசதி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் அதிகாரிகள் தெரிவித்தனர்.