மார்ச்.23.
கரூர் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளிலும்(22.03.2023) உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. கரூர் ஊராட்சி ஒன்றியம் சோமூர் கிராம ஊராட்சி திருமுக்கூடலூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிரபுசங்கர், சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
கலெக்டர் பேசுகையில்,
இந்த திருமுக்கூடலூரின் தனி சிறப்பு 3ஆறுகள் ஒன்று சேரும் இடம்.இந்த இடத்தில் உலக தண்ணீர் தின கிராமசபைக்கூட்டம் நடைபெறுவது சிறப்பாகும்.
வெயில் தாக்கம் அதிகம் உள்ளதால் இந்த வெயில் காலத்தில் பொதுமக்கள் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டு ஆகும். கம்பு, சோளம், மக்காச்சோளம் ,கேழ்வரகு, திணை ஆகியவைகளை ஒரு காலத்தில் அதிக அளவில் பயன்படுத்தினோம். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் மிக குறைவாக மழை பொழிகின்ற மாவட்டங்களில் கரூர் மாவட்டமும் உள்ளது. வருடத்திற்கு 640 மி.மீ மட்டுமே மழை பெய்கிறது.
எனவே குறைந்த அளவு தண்ணீரில் விளையும் சிறுதானிய வகை பயிர்களை அதிகமாக பயிரிட வேண்டும். சிறுதானியங்களில் நுண்ணூட்ட சத்துக்கள் அதிகளவில் உள்ளது. நமது உடலுக்கும் ஆரோக்கியமானது. குறிப்பாக பெண்கள் சிறுதானிய உணவுகள் உண்ண வேண்டும். சிறுதானிய உணவுகளை உட்கொண்டால் எந்த நோய்களும் வராமல் தற்காத்துக் கொள்ள முடியும்.
மகளிர் சுய உதவி குழு என்பதை முதன் முதலில் அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு தான். அதுவும் முன்னாள் முதல்வர் கலைஞர் காலத்தில் தான் இது அறிமுகப்படுத்தப்பட்டது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்றால் அவர்கள் கையில் பொருள் இருக்க வேண்டும்.
மகளிர் சுய உதவி குழுவில் உறுப்பினர்கள் ஆதிதிராவிடர்களாக இருந்தால் 30% மானியம். வழங்கப்படுகிறது. தாட்கோ மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறவை மாடுகள் வாங்கி வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து ஊர்களிலும் உள்ள ஆரம்பப் பள்ளிகளில் காலை உணவு வழங்க உத்தரவிட்டுள்ளார். அந்த காலை சிற்றுண்டியை உணவங்களில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் சமைத்துக் கொடுக்கலாம். நம்ம ஊரு பெண்கள் அனைவரும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களாக வேண்டும். ஒவ்வொரு கிராமத்திற்கும் இணையதள வசதியை ஏற்படுத்துவதற்கான கேபிள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து ஊராட்சிகளிலும் இணையதள வசதி ஏற்படுத்தப்படும். அதன் காரணமாக இணையதளம் மூலமாக நடைபெறும் அனைத்து பணிகளும் விரைவாக நடைபெறும் என்றார்.
பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணிஸ்வரி, ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சீனிவாசன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர். அன்புமணி, கரூர் வருவாய் கோட்டாட்சியர்.ரூபினா, கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலெட்சுமி, பரமேஸ்வரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மரு.சந்தோஷ்குமார், வேளாண் இணை இயக்குனர் . சிவசுப்பிரமணியன், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் மரு. முரளிதரன் , கரூர் வட்டாட்சியர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.