மே.20-
கரூர் அருகே வசிக்கும் பெண்ணுக்கும் தென் கொரியா நாட்டைச் சேர்ந்த வாலிபருக்கும் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது.
கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் அருகே நடையனூர் பகுதி மணி -ஜெயலட்சுமி தம்பதியரின் மகள் விஜயலட்சுமி(28) .பொறியியல் பட்டம் பெற்ற இவர் பெங்களூரில் ஐ.டி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஆங்கிலத்துடன் கொரிய மொழி தெரியும். ஆன்லைனில் பணி நிமித்தம் வலைத்தளங்களில் பதிவிட்டபோது கொரியா நாட்டைச் சேர்ந்த மின்ஜுன் கிம் (28) என்பவருடன் பேச ஆரம்பித்தனர். கிம் கிஸ்ட் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் பட்டம் பெற்றவர். அந்நாட்டில் ஐடி துறையில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த ஓராண்டாக ஆன்லைன் மூலம் பேசி வந்த இருவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த மார்ச் மாதம் நேரில் காண்பதற்காக கொரியா சென்ற விஜயலட்சுமி கிம் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பேசினார் . அப்போது கிம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டனர்.
இங்கு பெண் வீட்டார் தரப்பிலும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
கிம் குடும்பத்தில் அவரது தாய் தந்தை, நண்பர் உட்பட நான்கு நபர்கள் தமிழ்நாடு வந்தனர். நேற்று வேலாயுதம் பாளையம் அடுத்துள்ள கோம்புப்பாளையம் பூதேவி சீதேவி சமேதசீனிவாசபெருமாள் கோவிலில் இரு வீட்டார் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் தமிழ் முறைப்படி கிம் கரூர் பெண்ணான விஜயலட்சுமிக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். தமிழ்நாட்டு முறைத் திருமண முறையினை கிம் குடும்பத்தினர் ஆர்வமுடன் தெரிந்து கொண்டனர். நடையனூர் தனியார் திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்தம் மற்றும் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது.
புதுமண தம்பதிகள் உற்சாகமாக நடனமாடினர். விஜயலட்சுமி தற்போது சுற்றுலா விசா மூலம் சென்று பின்னர் நிரந்தர விசா பெறுவதற்கு தேர்வு எழுத உள்ளதாக கூறினார். சுற்றுவட்டார பகுதியில் வசிப்போரும், புது தம்பதியரை வந்து பார்த்து வாழ்த்து தெரிவித்தனர்.