ஜன.13.
தமிழக சட்டப்பேரவையில் கரூர் நிகழ்வுகள் குறித்த புகாரை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எழுப்பினார் . அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார்.
செந்தில் பாலாஜி- கரூர் மாவட்ட ஊராட்சி குழுவினுடைய துணைத் தலைவர் தேர்தல் நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இதில் வேட்பு மனு தாக்கல் செய்ய அங்கு போய் தான் தாக்கல் செய்ய வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் சொன்னார். வேட்பு மனு தாக்கல் செய்து போட்டியிட்டார் என்று அங்கு போனால் தான் தாக்கலே செய்ய முடியும் .
(எதிர்க்கட்சியினர் குறுக்கீடு)
அமைச்சர் -அங்கு போனவர்களில்… சொல்லி முடித்து விடுகிறேன் ஒரு நிமிஷம்
.
அங்கு போனவர்களில் திமுக பெற்ற வாக்கு ஏழு அதிமுக பெற்ற வாக்கு நான்கு. தி மு க வேட்பாளர் மகத்தான வெற்றி பெற்றார். இந்த தேர்தல் களத்தில் திமுக வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாமல் பொறுத்துக் கொள்ள முடியாமல் தங்களது தோல்வியை மனதளவில் ஏற்றுக் கொள்ள முடியாமல் இது போன்ற அவதூறுகளையும் கருத்துகளையும் முன்வைக்கிறார்கள். எனவே காவல் நிலையத்தில் நீங்கள் புகார் கொடுத்திருந்தாலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடிய
முதல்வரின் அரசு இது
இன்னொரு வழக்கை பற்றியும் குறிப்பிட்டு சொன்னார்கள். பொதுவாக தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். தோல்வியை மறைப்பதற்காக கூறக்கூடாது. ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் தேர்தல் நடத்துவதற்கான கட்டுப்பாடுகளை விதித்தனர் . அந்த இடத்தில் போய் 200க்கும் மேற்பட்டவர்கள் போய் வன்முறையில் ஈடுபட்டு தேர்தலை நிறுத்துவதற்கான முயற்சி செய்ததால் தடுத்தார்கள். தேர்தலை நிறுத்த வேண்டும் என கோரிய மனு தள்ளுபடி செய்து தேர்தலை சந்தியுங்கள் என உத்தரவிடப்பட்டு தேர்தல் நடைபெற்றது. அதில் திமுக மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறது. மனதளவில் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர் கட்சி தலைவர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் என ஒன்று உள்ளது. அதில் தாழ்த்தப்பட்டோருக்கு தலைவர் பதவி இட ஒதுக்கீடு. முழுவதும் திமுகவினர் வெற்றி பெற்றனர். திமுகவில் வெற்றி பெற்ற உறுப்பினரை கூட்டிக்கொண்டு போய் சேர்மன் சீட்டில் உட்கார வைத்தது கடந்த அதிமுக ஆட்சி.
அது போன்ற தவறுகளை நாங்கள் செய்யவில்லை. நேர்மையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடைபெற்று திமுக வெற்றி பெற்றது.
சபாநாயகர் அப்பாவு -மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி – மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு அதிமுகவிலிருந்து எட்டு பேர் வெற்றி பெற்று வந்தனர். எப்படி உங்களுக்கு அதிகமான பேர் வர முடியும். வேண்டும் என்றே திட்டமிட்டு ஒரு தவறான செய்தி தான் பரப்பிக்கிட்டு இருக்கீங்க. இதையெல்லாம் கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் அறிவிக்கப்பட்டு அனுமதி வழங்கவில்லை. கோர்ட் அனுமதியுடன் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட எங்களது நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். பொதுக்கூட்டம் நடைபெறுகிறது அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பேசிய நிர்வாகிகள் மீதும் எம்எல்ஏக்கள் மீதும் எந்த வகையில் வழக்கு போடப்பட்டிருக்கிறது என்பதை இந்த அரசு எண்ணிப் பார்க்க வேண்டும்.
சபாநாயகர் -அமைச்சர் பதிலளிப்பார்.
எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு.
அமைச்சர் செந்தில் பாலாஜி- கரூரைப் பற்றி பேசுகிறீர்கள்.
நான் பதில் சொல்ல வேண்டும். அமைச்சரவைக்கு கூட்டுப் பொறுப்பு இருக்கிறது. ஏன் உங்களுக்கு அதில் அவ்வளவு ரோசம் வருகிறது.
(கூச்சல் குழப்பம்.)
சபாநாயகர்- நீங்கள் சொன்னது தேர்தல் சம்பந்தப்பட்ட விஷயம். மாண்புமிகு முதலமைச்சர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்-
அமைச்சர் சொல்வதற்கு அதிகாரம் உண்டு முதலமைச்சர் சொல்லட்டும் நீங்க சொல்லாதீங்க என்று கேட்க முடியாது. சம்பந்தப்பட்ட மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் என்னை விட அவருக்கு அதிக விவரம் தெரிந்திருக்கும் அந்த விஷயத்தைப் பொறுத்தவரைக்கும். அதனால் அவர் பதில் கூறுவார்.
அமைச்சர்-ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் சொல்லி விடுகிறேன். நீங்கள் சொன்ன கருத்துக்கு பதிய வைப்பதற்காக. 2019 இல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் சம்பந்தமாக எங்களுடைய இயக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் அப்போது மாவட்ட தேர்தல் அதிகாரியாக இருந்த ஆட்சியரிடம் ஒரு மனுவை கொடுப்பதற்காக முகாம் அலுவலகத்திற்கு சென்றனர். நான் அந்த பகுதிக்கு போகவில்லை. வழக்கறிஞர்கள் மட்டும்தான் சென்றனர். அந்த மாவட்ட ஆட்சியர் என் மீது எம்எல்ஏவாக இருந்தபோது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தார். மனு கொடுத்து இரண்டு நாட்களுக்கு பிறகு சம்பவ இடத்திலேயே இல்லாத என் மீது மாவட்ட செயலாளராக பணியாற்றிய போது அதுவும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு அதற்கு பிறகு நான் நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்கக்கூடிய சூழல் சம்பவ இடத்திற்கு போகாத எனக்கு நேர்ந்தது.
காவல்துறை பொதுக்கூட்டம் நடத்துவதற்கு சில நிபந்தனை விதிக்கும். அது எல்லோருக்கும் தெரியும். நிபந்தனையின்படி கூட்டம் நடந்திருந்தால் வழக்கு வந்திருக்காது. அதற்கு மாறாக முடிந்தால் நீங்கள் தடுத்து பாருங்கள் என்றெல்லாம் பேசி அந்த வீடியோ பதிவை பார்த்தால் தெரியும். அரசை எப்படி எல்லாம் பேசி இருந்தார்கள் என்று. மிக மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தினர். நிபந்தனைகளுக்கு உட்பட்டு கூட்டம் நடைபெறாத காரணத்தினால் காவல்துறை தன் கடமையை செய்திருக்கிறது. சட்டப்படி வழக்கை பதிவு செய்திருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர்-
2019ல் அவர் மீது வழக்கு போட்ட ஒரே காரணத்திற்காக அதற்கு பழி வாங்குகிறார் அப்படித்தான் எண்ணி பார்க்க வேண்டியது இருக்கிறது.
முதலமைச்சர் – அவரே தெளிவாக சொல்லிவிட்டார் என்ன நிபந்தனைகள் காவல்துறை விதித்து இருக்கிறதோ, அதை மீறி நீங்கள் அங்கு மேடையில் பேசியது, நடந்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையில் வழக்கு போட்டிருக்கிறார்கள். இதுபோன்ற எத்தனையோ வழக்குகள் நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்காக உங்களை பழி வாங்குவதற்காக போடப்பட்டது அல்ல இது. ஆகவே அந்த அடிப்படையில் தான் வழக்கு போடப்பட்டிருக்கிறதே தவிர எதிர்க்கட்சித் தலைவர் சொல்கின்ற கூற்று முறையானது அல்ல என்றார்.