ஜூலை ன.30.
கரூர் மாவட்டத்தில் உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ. 35 கோடி கல்வி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் தங்கவேல் தலைமையில் உயர்கல்வி பயிலும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு கல்வி கடன் வழங்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து கலெக்டர் பேசுகையில்,
கரூர் மாவட்டத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவ மாணவியர்கள் பொருளாதாரத்தை காரணம் காட்டி மேல்படிப்பு படிப்பதை தவிர்க்கும் பொருட்டு 2024-2025 ஆம் ஆண்டு 2500 விண்ணப்பங்களுக்கு ரூ.35 கோடி கல்வி கடன் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரியிலும் முன்னேடி வங்கியின் சார்பாக கல்வி கடன் தொடர்பாக விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட உள்ளது. எனவே கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்வி கடன் பெற்று உயர்கல்வி பயில விரும்பும் மாணவ மாணவியர்கள் உங்கள் அருகாமையில் உள்ள வங்கிகளில் கல்வி கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம்.
நடப்பாண்டில் கரூர் மாவட்டத்திற்கு ரூ.35 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதால் விவரம் தெரிந்தவர்கள் யாருக்கேனும் விவரம் தெரியாவிட்டால் அருகாமையில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்து அனைவரும் இதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.
மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வசந்தகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் பிரகாஷ், மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.