நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க என வாழ்த்துவோம். கரூர் (மா)நகராட்சிக்கு வயது 150.
1874-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி கரூர் நகராட்சியாக இருந்தது. மக்கள்தொகை பெருக்கம், வருவாய் உயர்வு காரணமாக 1969-ம் ஆண்டில் முதல் நிலை, 1983-ம் ஆண்டில் தேர்வு நிலை, 1988-ம் ஆண்டில் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது 32 வார்டுகள் இருந்த நிலையில் 1995-ல் 36 வார்டுகளாக அதிகரிக்கப்பட்டது. இங்கு 2001-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 76,328 பேர் வசித்தனர்.
2011-ல் கரூர் நகராட்சியுடன், அதன் அருகில் இருந்த இனாம்கரூர், தாந்தோணி நகராட்சிகள் மற்றும் சணப்பிரட்டி ஊராட்சி ஆகியவை இணைக்கப்பட்டன. இதனால், கரூர் நகராட்சியின் பரப்பளவு 6.03 ச.கி.மீட்டரில் இருந்து 53.26 ச.கி.மீட்டராகவும், வார்டுகள் எண்ணிக்கை 48 ஆகவும், மக்கள்தொகை 2.14 லட்சமாகவும் அதிகரித்தது.
கரூர் சிறப்பு நிலை நகராட்சி உருவாக்கப்பட்டு 146 ஆண்டுகள் 9 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் கடந்த 2021 ஆக.23-ம் தேதி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மாமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. கரூர் நகராட்சி, என்கிற உள்ளாட்சி அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு 149 ஆண்டுகள் நிறைவடைந்து நவ.1 ஆம் தேதி கரூர் (மா)நகராட்சி 150-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது.
கரூர் மாநகராட்சியையொட்டியுள்ள ஆண்டாங்கோவில் கிழக்கு, காதப்பாறை உள்ளிட்ட ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும், இந்த ஊராட்சிகளில் கடந்த 2019-ல் நடைபெற்ற ஊரக தேர்தலில் வெற்றிபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் 2025 ஜனவரி வரை இருப்பதால், அதன் பிறகே மாநகராட்சியுடன் அப்பகுதிகளை இணைத்து எல்லை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மேயர் கவிதா கணேசன் தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் ( மா) நகராட்சி 150 ஆண்டில் அடி எடுத்து வைப்பதை முன்னிட்டு சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு மாமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது….
மேலும் நகராட்சியில் பணியாற்றும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் தீபாவளி பண்டிகையைக் முன்னிட்டு பலகாரங்கள் மற்றும் பரிசு தொகுப்பு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இந்த கூட்டத்தில்.. துணை மேயர் தாரணி சரவணன் ஆணையர் சரவணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்