ஆக.1.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றின் கதவணைக்கு வினாடிக்கு 169415 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இங்கிருந்து வினாடிக்கு 167895 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தென்கரை வாய்க்கால் 700 கன அடி. கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்களில் தலா 400 கன அடி. கிருஷ்ணராயபுரம் வாய்க்காலில் 20 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை வட்டங்களில், கட்டளை, ரெங்கநாதபுரம், மாயனூர் கதவணை, செல்லாண்டியம்மன் கோவில் கடம்பர் கோவில் மற்றும் திம்மாச்சிபுரம் தோனி அம்மன் கோவில் காவிரிக்கரையோரம் ஆகிய பகுதிகளில் காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்கிறது.
கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் நீர்வரத்தை நேரில் ஆய்வு செய்தார்.
முதலமைச்சர் அவர்கள், கடந்த 28.07.2024 அன்று காணொலி காட்சி வாயிலாக காவிரி கரையோரம் அமைந்துள்ள டெல்டா மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு காவிரி ஆற்றில் அதிகளவு நீர் வரத்து. வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நீர் சேமிக்கும் முறைகள் குறித்து ஆலோசணைகளை வழங்கி. கரையோர பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார்கள்.
மேலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கணமழை நீட்டிப்பதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி நீர்வளத்துறையின் சார்பாக 16 கண் மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால், காவிரி கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு வருவதோடு, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை, காவல் துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட துறையினர் காவிரி ஆற்றில் தண்ணீர் செல்லும் அளவினை இரவு பகலாக தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒலிப்பெருக்கி. செய்தித்தாள்கள். உள்ளூர் கேபிள் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாகவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இளைஞர்கள். பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் ஆற்றின் நீரில் இறங்கி குளித்தல், மீன்பிடித்தல், கால்நடைகளை குளிப்பாட்டுதல், ஆற்றங்கரையோரத்தில் நின்று சுயபடம் எடுத்தல் போன்ற நடவடிக்கைகளை முற்றிலும் தவிர்த்திட வேண்டுமென எச்சரிக்கைப்படுகிறது. அதிக நீர் வரத்து பகுதி புகழுர் தவிட்டுப்பாளையத்தில் 2 இடங்கள், குளித்தலை கே.பேட்டை மண்மங்கலம் வட்டம் நெரூர் தெற்கு ஆகிய இடங்களில் நிவாரண முகாம்கள் தயார்நிலையில் உள்ளது என கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். திம்மாச்சிபுரம் சமுதாயக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம் தயார்நிலையில் உள்ளதை பார்வையிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் தனலெட்சுமி. பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) உதவிசெயற்பொறியாளர் கோபிகிருஷ்ணா வட்டாட்சியர்கள் உடனியிருந்தனர்.