அக்.14.
கரூரில் 3வது புத்தகத் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வைத்து பேசினார். தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் பொது மேலாளர்(மனிதவளம்) கலைச்செல்வன், முதன்மை பொது மேலாளர்(இயக்கம்) நாகராஜன், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க (பபாசி) செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர்.
கலெக்டர் பேசுகையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைக்கிணங்க, மாவட்ட நிர்வாகம். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம், நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து 3 ஆவது மாபெரும் புத்தக திருவிழா 2024 (03.10.2024 – 13.10.2024 வரை) நடைபெற்று நிறைவடைகிறது.
புத்தக அரங்குகள். குறும்பட திரையரங்கம், கோளரங்கம், கலை நிகழ்ச்சிகள் மற்றும் உணவரங்கினை 90250 அளவிலான மாணவ மாணவிகள், பொதுமக்கள் பார்வையிட்டுள்ளார்கள். 11 நாள் நடைபெற்ற புத்தக திருவிழாவில் மொத்தம் 40300 புத்தகங்கள் ரூ.60 இலட்சம் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி தனி நபர்கள் தங்களது வீடுகளில் சொந்த நூலகம் அமைத்து பராமரிக்கப்பட்டு வருபவர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு பரிசளிக்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் 22 நபர்கள் தங்களது இல்லங்களில் சொந்த நூலகம் வைத்து பராமரித்து வருகிறார்கள். மாவட்ட நூலக அலுவலர் தலைமையில் இல்லங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட போது 12 ஆயிரத்திற்கும் அதிகமான புத்தகங்களை வைத்து பராமரித்து வரும் முனைவர். கடவூர் மணிமாறன் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பிற நூலகங்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார். பின்னர் நன்கொடையாளர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
சிந்தனை அரங்கத்தில் கலைமாமணி பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தம் ‘இலக்கியமே இன்பம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். முன்னதாக வேளாண் இணை இயக்குநர் ராமசாமி வரவேற்க ஊராட்சிகளின் உதவி இயக்குநர் சரவணன் நன்றி கூறினார். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார். ஆர்டிஓ. முகமது பைசல் கலந்து கொண்டனர்.