மே.14.
2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி எழுந்துள்ளது. இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா போராட்டம் போல் உள்ளது. இந்த இரண்டு அணிகளும் மோத உள்ள லீக் போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றால் சிஎஸ்கே-வை முந்தி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கணக்கு கூறுகிறது. முன்னதாக இந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தான் ஆடிய முதல் எட்டு போட்டிகளில் ஏழு தோல்விகளை சந்தித்து இருந்தது. எனினும் அடுத்த ஐந்து போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று, தற்போது 13 போட்டிகளில் ஆறு வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி 14 புள்ளிகளுடன் உள்ளது.
தற்போது உள்ள சூழ்நிலையில் கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, நான்காவது இடத்திற்கு மோதும் சிஎஸ்கே – ஆர்சிபி போட்டியானது வாழ்வா சாவா போட்டியாக அமைந்து விட்டது.
டெல்லி, லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளுக்கும் பிளே ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு எப்படி என பார்த்தால் அந்த அணிகளின் நெட் ரன் ரேட் மோசமாக இருக்கிறது.
மே 18 அன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ள பரபரப்பான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் -ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன.
இந்த போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் எடுத்தால் பெங்களூரு அணி 18.1 ஓவரில் அந்த இலக்கை எட்ட வேண்டும். அதேபோல பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் எடுப்பதாக வைத்துக் கொண்டால், சிஎஸ்கே அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். இது நடந்தால் சிஎஸ்கே அணியின் நெட் ரன் ரேட்டை பெங்களூரு அணியால் முந்த முடியும். மேலும், வெற்றி பெறுவதன் மூலம் 14 புள்ளிகளை பெற்று, நெட் ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கே அணியை முந்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பது வல்லுனர்களின் கணக்கு.
பெங்களூர் மைதானத்தில் 200 ரன்களை எளிதாக எடுக்கலாம். எனினும் தற்போது அங்கு மழை பெய்து வருவது ஆர்சிபி.க்கு சோதனையாக அமைந்துவிட்டது. 18ம் தேதிக்குள் பிட்ச் சரியாக வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். முதலில் ஆடும் அணி எடுக்கும் ரன்களுக்கு ஏற்ப இந்த கணக்கில் மாறுபாடு இருக்கும். இதையடுத்து சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி ரசிகர்கள்பரபரப்பாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.