நவ.4 .
மூன்று நாட்கள் நடைபெறும் சர்வதேச முருங்கை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் இன்று கரூரில் துவங்கியது. வேளாண்மை துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர் செல்வம், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் சர்வதேச முருங்கை கண்காட்சியை துவக்கி வைத்தனர்.
சர்வதேச முருங்கை கண்காட்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். அதில், காவிரியும் அமராவதியும் கரைபுரண்டோடும் கரூர் மாவட்டத்தில் மண்வளமும் பருவநிலையும் முருங்கை சாகுபடிக்கு பொருத்தமானதாக இருப்பதால் கரூர் மாவட்டம் முருங்கை களஞ்சியமாக திகழ்கிறது. அதனை கருத்தில் கொண்டே கரூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, அரியலூர் ,திருப்பூர் மற்றும் மதுரையை முருங்கைக்கான ஏற்றுமதி மண்டலம் என கழக அரசு அறிவித்தது. உணவில் சுவையை கூட்டுவதில் மட்டுமல்ல உடலுக்கு வலு சேர்க்க கூடிய மருத்துவ பண்பும் முருங்கைக்கு உண்டு . காய் இலை விதை பட்டை என முருங்கையின் அனைத்திலும் மருத்துவ குணம் அடங்கியுள்ளது . நவம்பர் 4, 5 மற்றும் 6 ஆகிய நாட்களில் நடைபெறும் பன்னாட்டு முருங்கை கண்காட்சி மிக முக்கியத்துவம் வாய்ந்தது. உலகெங்கும் பயன்படும் இந்த உன்னத முருங்கையின் உற்பத்தி, பதப்படுத்துதல், மதிப்புக்கூட்டும் எந்திரங்கள் பல்வேறு பயன்கள் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை வேளாண் பெருமக்கள் அறிய, இந்த கண்காட்சி மிகப் பயனுள்ளதாக இருக்கும். கண்காட்சி வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். முருங்கை உழவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்பதை தெரிவித்துக் கொண்டு, பன்னாட்டு முருங்கை கண்காட்சிக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருக்கும் இந்திய தொழில் கூட்டமைப்பிற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், வேளாண் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், எம்எல்ஏக்கள் மாணிக்கம், மொஞ்சனூர் இளங்கோ, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் மற்றும் அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
முருங்கைகான ஏற்றுமதி மண்டலத்திற்குள் முருங்கை பெருமளவில் விளையும் கரூர் மாவட்டத்தை இணைத்து முதல்வர் அறிவித்தார். இந்திய தொழில் கூட்டமைப்பு, கரூர் மாவட்ட நிர்வாகம் இணைந்து முன் எடுக்கும் இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த சர்வதேச முருங்கை கண்காட்சியின் ஒரு பகுதியான கருத்தரங்கை முருங்கை உற்பத்தி பெருக்குதல் ,பதப்படுத்தும் முறைகள், மதிப்பு கூட்டப்படும் பொருட்களை தயாரிக்கும் முறைகள், தயாரிப்பு எந்திரங்கள் மற்றும் கரூரில் இருந்து உலகின் அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை வேளாண் மக்கள் அறிந்து கொள்ளலாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.