மார்ச்.5.
ஐசிசி தொடரின் நாக் அவுட் சுற்றில் 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. துபாயில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் முதல் அரையிறுதியில டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட் செய்தது.
மூன்றாவது ஓவரில் இளம் வீரர் கான்லி விக்கெட்டை வீழ்த்தினார் ஷமி. அதன்பின்னர் ஆஸ்திரேலியா வீரர்கள் ரன்களை குவிக்க துவங்கினர். ஆஸ்திரேலிய அணியின் ரன் குவிப்பை தடுக்க விதமாக 9-வது ஓவரில் வருண் சக்கரவர்த்தியை கேப்டன் ரோஹித் அனுப்ப, அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் ஹெட் விக்கெட்டை வருண் வீழ்த்தினார். அதன் மூலம் ஸ்மித், ஹெட் கூட்டணி முடிவுக்கு வந்தது.
அடுத்து வந்த லபுஷேன், ஸ்மித் ஜோடி ரன்களை குவிக்க ஸ்கோர் எகிறியது.36 பந்துகளில் 29 ரன்கள் எடுத்த நிலையில் லபுஷேனை ஜடேஜா எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றியதுடன், இங்கிலிஸையும் ஜடேஜா அவுட் ஆக்கினார். ஸ்மித் அதிரடியாக ஆடினார். 96 பந்துகளில் 73 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்து வீச்சில் ஸ்மித் போல்ட் ஆனார். அதற்கு முன்பு வரை ஆஸ்திரேலியா 300+ ரன்கள் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்மித் விக்கெட்டை கைப்பற்றி திருப்புமுனை ஏற்படுத்தினார் ஷமி. அதிரடியாக விளாசிய கேரியை ரன் அவுட் செய்து வெளியேறி ஸ்ரேயாஸ் முடிவுரை எழுதிவிட்டார். . அவர் 57 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். ஆரம்பத்தில் மிரட்டிய ஆஸி. 49.3 ஓவர்களில் 264 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அடுத்து 264 ரன்கள் என்ற பெரிய இலக்கை விரட்டியது இந்திய அணி. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். கில், 8 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரோஹித் சர்மா 29 பந்துகளில் 28 ரன் எடுத்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்து விளாசினார். ஆஸி. பந்துகளை துவம்சம் செய்து 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஸ்ரேயாஸ், 62 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து வெளியேறினார். அக்சர் படேல் 27 ரன்கள் எடுத்தார்.கே.எல்.ராகுல் அதிரடியாக ஆடினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோலி 98 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா 24 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். மூன்று சிக்ஸர்களை அவர் விளாசி கைகொடுத்தார். 48.1 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. ஆஸி.யின் கனவையும் தகர்த்தது. வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நியூஸிலாந்து அல்லது தென் ஆப்பிரிக்காவை இறுதி ஆட்டத்தில் இந்தியா எதிர்கொள்ள இருக்கிறது.