மே.28.
கரூர் கூடைப்பந்து கழகம் சார்பில் ஆண்களுக்கான 64-வது அகில இந்திய எல்ஆர்ஜி நாயுடு நினைவு சுழற்கோப்பை மற்றும் பெண்களுக்கான 10-வது கரூர் வைஸ்யா வங்கி சுழற்கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் 22-ம் தேதி தொடங்கியது. 27-ம் தேதி வரையிலான ஆட்டத்தில் நேற்று இறுதிப் போட்டிகள் நடைபெற்றன.
பெண்கள் பிரிவில் சவுத் வெஸ்டர்ன் ரயில்வே ஹூப்ளி- சென்ட்ரல் ரயில்வே மும்பை அணிகள் மோதின. இதில் சவுத் வெஸ்டர்ன் ரயில்வே அணி 61-53 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்றது. அந்த அணி வீராங்கனை கிருத்திகா 20 புள்ளிகளும் சென்ட்ரல் ரயில்வே வீராங்கனை ராஜேஸ்வரி 13 புள்ளிகளும் எடுத்தனர். 3ம் இடம் வெஸ்டர்ன் ரயில்வே மும்பை, 4 ம் இடம் நார்தன் ரயில்வே நியூ டெல்லி அணிகளுக்கு கிடைத்தன.
ஆண்கள் பிரிவில் இந்தியன் நேவி- இந்தியன் ஏர்போர்ஸ் அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. ஆரம்பம் முதலே ஆட்டம் பரபரப்பாக இருந்தது. இரு அணியினரும் அடுத்தடுத்து புள்ளிகளை எடுத்தனர். முடிவில் 64 – 55 என்ற புள்ளி கணக்கில் நேவி அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது. அந்த அணி வீரர் கவுரவ் 17 புள்ளிகளும், ஏர்போர்ஸ் வீரர் சந்தோஷ் 15 புள்ளிகளும் எடுத்தனர். ஏர்போர்ஸ் அணிக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. 3ம் இடம் நார்தன் ரயில்வே புது டெல்லி, 4ம்இடம் ஐ சி எப் -சென்னை அணிகளுக்கு கிடைத்தன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகளும் ரொக்க பரிசுகளும் சிறந்த வீரர் -வீராங்கனைகளுக்கு தனிநபர் பரிசுகளும் வழங்கப்பட்டன. கரூர் மாவட்ட வருவாய் அதிகாரி கண்ணன், கேவிபி முதன்மை பொது மேலாளர் சந்திரசேகரன், கூடைப்பந்து பெடரேசன் இந்தியா தலைவர் மற்றும் தமிழ்நாடு கூடைப் பந்து சங்க தலைவர் ஆதவ்அர்ஜுனா ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் ரொக்க பரிசுகளை வழங்கினர்.
கரூர் மாவட்ட கூடைப் பந்து கழக தலைவர் வி.என்.சி.பாஸ்கர், செயலாளர் எம்.முகமது கமாலுதீன், துணைத் தலைவர்கள் சூரிய நாராயணன், சண்முகசுந்தரம், இந்திரமூர்த்தி, பாலசுப்பிரமணியன், பொருளாளர் அனீஸ் பெரியசாமி, இணைச் செயலாளர்கள் வெங்கடேசன், முகமது அமீன், மற்றும் முருகேசன், சுரேஷ், முத்துராமன், செந்தில் ராஜா, வேலுச்சாமி, வெங்கடேசன், ரவி, ஜீவா குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.