நவ.15.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற செமி பைனல் போட்டி ஷமி பைனல் போட்டி என மாறியது.
இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 397 ரன்கள் எடுத்தது. 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நியூஸிலாந்து வீரர்கள் விரட்ட மிரட்டல் ஆட்டம் ஆடினர். தொடக்க ஆட்டக்காரர்கள் கான்வே மற்றும் ரச்சின் ஷமி வீசிய அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.
மூன்றாவது விக்கெட்டுக்கு வில்லியம்சன் மற்றும் மிட்செல் இணைந்தனர். இருவரும் இணைந்து 181 ரன்கள் குவித்து வெற்றிக்கு பாதை அமைத்துக் கொண்டிருந்தனர். பவுன்டரிகளை பறக்க விட்டனர்.
வில்லியம்சன், 69 ரன்களில் ஆட்டமிழந்தார். நெருக்கடி கொடுத்த இணையரை பிரித்துவிட்டவர் ஷமி. அதே ஓவரில் டாம் லேதம் விக்கெட்டையும் தூக்கினார். எனினும் கிளென் பிலிப்ஸ் உடன் இணைந்து 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் உருவாக்கினார் மிட்செல்.
அடுத்து பிலிப்ஸ், 41 ரன்னில் வெளியேற தொடர்ந்து வந்த மார்க் சேப்மேன் 2 ரன்களில் வெளியேறினார்.
119 பந்துகளில் 134 ரன்கள் எடுத்து இந்தியாவை அச்சுறுத்திய மிட்செல்லும் ஆட்டமிழந்தார். 9 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் விளாசினார் அவர். ஷமி அவரையும் பெவிலியன் திரும்ப வைத்தார். 48.5 ஓவர்களில் 327ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது நியூசிலாந்து. 70 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. நியூஸிலாந்து. இந்திய அணி சார்பில் ஷமி 7 விக்கெட்களை வீழ்த்தி வெற்றிக்கு வழி வகுத்து ஆட்டநாயகன் ஆனார். . பும்ரா, குல்தீப் மற்றும் சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றி இருந்தனர்.
முன்னதாக பேட்டிங்கில், ரோகித், கில், கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் ஆகியோர் சிறப்பாக ஆடினர். பந்து வீச்சில் ஷமி சூறாவளியில் மொத்தமாக 7 விக்கெட்களை அவர் கைப்பற்றினார்.
சச்சின் சாதனை முறியடிப்பு:
விராட் கோலி பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தார். 60 பந்துகளை சந்தித்த கோலி, 4 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்தார். 14 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 114 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 29வது ஓவரில் இந்திய அணி 200 ரன்களை கடந்தது. தொடர்ந்து கோலியுடன் ஸ்ரேயஸ் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இருவரும் 7 ரன் ரேட் என்பதை குறையாமல் பார்த்துக்கொண்டனர். ஸ்ரேயஸ் அரைசதம் பதிவு செய்தார்.
அதேநேரம், சதத்தை நோக்கி முன்னேறிய விராட் எதிர்பார்த்தபடி, வரலாற்று சதம் அடித்து அசத்தினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 49 சதம் அடித்த சச்சினின் சாதனையை முறியடித்து 50வது சதம் அடித்தார் விராட் கோலி. 106 பந்துகளை சந்தித்த கோலி, 8 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்து சதத்தை பூர்த்தி செய்தார். இதன்பின் 117 ரன்களில் டிம் சவுதியின் பந்துவீச்சில் கேட்ச் ஆகி அவுட் ஆனார்.
கோலியைத் தொடர்ந்து ஸ்ரேயஸ்சும் சதம் விளாசினார். 67 பந்துகளில் 3 பவுண்டரி, 8 சிக்ஸர்களுடன் ஸ்ரேயஸ் சதம் பதிவுசெய்த நிலையில் 105 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பழி தீர்த்தது
கடந்த உலகக் கோப்பை அரையிறுதியில் நியூஸிலாந்து விதித்த சிறிய இலக்கை இந்திய அணி விரட்ட முடியாமல் தோல்வி கண்டது. அனைத்து வடிவங்களிலும் நியூஸிலாந்து இதுவரை இந்திய அணியை 4 நாக் அவுட் போட்டிகளிலும் வென்றுள்ளது. இதனால் இன்றையப் போட்டியில் கடமையாக போராடி வென்றதுடன் நியூசிலாந்து அணியை இந்திய அணி பழி தீர்த்தது.