ஜூன்.13.
கரூர் வருமான வரித்துறை சார்பாக கரூர் மாவட்டத்தில் வரி செலுத்துவோர் அனைவரும் பயன்பெறும் வகையில் நேரடி சந்திப்பு விழிப்புணர்வு கூட்டம்(TAX PAYERS OUTREACH PROGRAMME) கரூர் ஆர்த்தி ஹோட்டல் அழகம்மை ஹாலில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் தலைமை விருந்தினராக திருச்சி வருமான வரித்துறை துணை ஆணையர் கே.ஆர்.கருப்பசாமி பாண்டியன், சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, கடந்த ஆண்டில் தேசிய அளவிலான நேரடி வரி வசூல் வளர்ச்சி விகிதம் 18% ஆகும். ஆனால் கடந்த ஆண்டில் திருச்சி, கரூர்,பெரம்பலூர் மற்றும் அரியலூர் உள்ளிட்ட மதுரை பிராந்தியத்தின் நேரடி வரி வசூல் 0.98 சதவீதம் மட்டுமே ஆகும். இது மிகவும் குறைவாக உள்ளது. எனவே வரிசெலுத்துவோர் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு உரிய வரியினை செலுத்த முன் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ADVANCE TAX எனப்படும் முன்கூட்டியே செலுத்தப்படும் வரியினை ஆண்டுக்கு நான்கு தவணைகளில் கட்டவேண்டும். முதல் தவணை ஜூன் 15-ம் தேதிக்குள்ளும் மீதமுள்ள தவணைகளை முறையே SEPTERMBER 15, டிசம்பர் 15 மற்றும் மார்ச் 15 தேதிக்குள் கட்டவேண்டும்.
ADVANCE TAX தாமதமாக செலுத்த நேரிட்டால் வட்டி மற்றும் அபராதம் செலுத்த நேரிடும். ஆகவே வரும் ஜூன் 15 தேதிக்குள் முதல் தவணை 15 சதவீதத்தை கட்டாயம் செலுத்த வேண்டும்
திருச்சி சரகத்திற்குட்பட்ட மொத்தமுள்ள நிரந்தர கணக்கு எண்கள் 30.74 லட்சமாகும். இதில் 3.09 லட்சம் நபர்கள் மட்டுமே வருமான வரி படிவம் தாக்கல் செய்கின்றார்கள். இது 10 % சதவீதம் மட்டுமே ஆகும்.
அப்படி தாக்கல் செய்யும் படிவங்களில் 0.25 சதவீதம் மட்டுமே ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டு சரிபார்க்கப்படுகிறது. மீதமுள்ள 99.75 சதவீதம் படிவங்கள் வரிசெலுத்துவோர் மீதுள்ள நம்பிக்கையில் அப்படியே ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே வரிசெலுத்துவோர் இதனை கவனத்தில் கொண்டு படிவங்களை அதிக அளவில் தாக்கல் செய்ய முன்வர வேண்டும் என்றும் கூறினார்.
வருமான வரிப் படிவம் தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31 மற்றும் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளுக்கான வருமான வரிப் படிவம் தாக்கல் செய்ய கடைசி நாள் அக்டோபர் 31 ஆகும்.
வருமான வரிப் படிவம் காலக் கெடுவுக்குள் தாக்கல் செய்யப்படவில்லை என்றால் அபராத தொகை செலுத்த நேரிடும் என தெரிவிக்கப்பட்டது. வருமான வரி அதிகாரி முத்துகிருஷ்ணன் காணொலி (ppt) மூலம் வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியுள்ள சேவைகள் மற்றும் வருமான வரி படிவம் தாக்கல் செய்யும் போது கவனிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றியும் விளக்கிக் கூறினார்.
கூட்டத்தில் CHAMBER OF COMMERCE செயலாளர் வெங்கட்ராமன் பேசும்போது, விழிப்புணர்வு கூட்டத்தில் கூறப்பட்ட விளக்கங்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார். ஆடிட்டர் ஹரி பேசினார். கரூர் மாவட்டத்தை சார்ந்த CHAMBER OF COMMERCE தலைவர் வக்கீல் ராஜூ, EXPORTERS ASSOCIATION , வணிகர் சங்கங்கள், வர்த்தக சங்கங்கள் , பட்டய கணக்காளர்கள், ஆடிட்டர்கள், மற்றும் வரி செலுத்துவோர்கள் கலந்து கொண்டார்கள்..சௌந்தரராஜன், வருமான வரி அதிகாரி வரவேற்றார்.
இதய பென்சிகர் வருமான வரி ஆய்வாளர் தொகுத்து வழங்கினார்.
கார்த்திக் நன்றியுரை கூறினார்.