டிச.24.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு முதல்வரின் முகவரி துறை சார்பில் நல்லாட்சி வார விழாவையொட்டி மாவட்ட அளவிலான பயிர் அரங்கம் நடைபெற்றது. கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமை வகித்தார். முன்னாள் தமிழக தலைமைச் செயலாளரும், தற்போதைய ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவருமான ஞான தேசிகன் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவர் கூறுகையில்
அனைவருக்கும் ஒரு வீட்டு மனை வாங்க வேண்டும் . அந்த மனையில் வீடு கட்டி சிறப்பாக வாழ வேண்டும் என்பது ஆசை. எனினும் அதை வாங்குவதற்கு முன்பு அது அரசு விற்க அனுமதி கொடுத்த மனையா?. வில்லங்கம் இல்லாததா என்பதை பார்த்து வாங்க வேண்டும். மும்பை டெல்லி போன்ற பெரு நகரங்களில் அபார்ட்மெண்ட் குடியிருப்பில் பெரும் தொகை கொடுத்து வாங்கி ஏமாந்து போகின்றனர். இது போன்ற பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வாக வீட்டுமனை சட்டம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதை தெரிந்து கொண்டு அதன்படி வீட்டு மனைகளை வாங்க வேண்டும். 500 சதுர மீட்டருக்கு மேல் இருக்கிற எந்த ஒரு மனையையும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். ஒரு வீட்டு மனைக்கு அனுமதி வாங்கும் போது உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெற்று இருக்கிறதா என்பதை பார்த்து அதன் பிறகு தான் நாங்கள் அனுமதி அளிக்கிறோம். தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் வெப்சைட்டை பார்த்து அதில் உள்ள அனைத்து வீட்டுமனை திட்டங்களையும் விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
இப்போது வீட்டு மனை தொடர்பாக வரும் விளம்பரங்களில் கட்டாயமாக எங்கள் துறை அனுமதி பெற்றதைக் குறிப்பிட வேண்டியது அவசியம். மேலும் ஒரு பெரிய பிளாட் வாங்கும் போது அதில் பிரச்சினைகள் ஏற்படும் போதும் புகார் அளித்தால் நீதிமன்ற அளவில் விசாரணை செய்து முடிவுகள் வழங்கப்படுகிறது. ஒரு புரமோட்டர் வீடு கட்டும் போது வீடு வாங்குபவர்களிடமிருந்து பெறப்படும் தொகையில் 70 சதவீதம் பணத்தை வீடு கட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதும் நமது சட்டத்தில் உள்ளது. நீங்கள் எநந்த சூலழிலும் ஏமாந்து விடக்கூடாது. ஒரு வேளை தெரியாமல் தவறாக வாங்கி விட்டால் ஆணையம் இருக்கிறது. தீர்வு காண ஆணையத்தை அணுகலாம். அனுமதி இல்லாமல் எந்த ஒரு வீட்டு மனையையும், வாங்கவும் விற்கவும் கூடாது என்றார்.