ஜூலை.25.
ஜூலை.25.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்ட அரங்கில் முன்னாள் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர்(ஓய்வு) முனைவர்.வெ.இறையன்பு, கல்லூரி மாணவ மாணவர்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கான நிகழ்ச்சியில் ‘படிப்பது சுகமே’ என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார்.
அவர் பேசியது-
நான் தலைமைச் செயலாளராக பொறுப்பில் இருந்தபோது கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் ஒரு கோரிக்கை வைத்திருத்தார். ஒரு முறையாவது கரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்து மாணவ மாணவியருக்கு மோட்டிவேஷன் வழங்குவதற்கு கேட்டிருந்தார்.
கரூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பான ஒரு நூலகத்தை பார்கையிட்டபோது ரோசன் என்ற மாற்றுத்திறனாளி ஒலி வடிவில் வரலாறு குறித்த பாடங்களை படிக்கின்றேன் என தெரிவித்த போது நான் மிகவும் மகிழ்ந்தேன். தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு முன்னேற்றங்கள் குறித்து கரூரின் கண்மணிகள் என்ற தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை பார்வையிட்டபோது பெண்கள் வளம்பெற வேண்டும். இடைநிற்றல் குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு வர வேண்டும். பெண்கள் இரத்தசோகை பாதிக்கக் கூடாது போன்ற திட்டங்கள் எல்லாம் மிகவும் பாராட்டுக்குரியது அம்சம்.
போட்டித் தேர்வு என்பது பல்கலை தேர்வுக்கு மாறுபட்டு இருக்கும். போட்டித் தேர்வுக்கு தயாராகும் போது அதற்கென மனநிலையை உருவாக்கி புரிந்து நன்கு படிக்க வேண்டும். முதலில் எத்தனை காலியிடங்கள் உள்ளன என அறிந்து உங்கள் மனநிலையை உருவாக்கி போட்டியிட வேண்டும். இந்திய ஆட்சிப்பணி போட்டித் தேர்வுக்கு தயாராகும் போது குறைந்தது 17 மணி நேரம் இதுக்க வேண்டும். நீங்கள் பாடத்திட்டங்களை தாண்டி அனைத்து மேற்கோள் புத்தகங்களையும் வாங்கி படிக்க வேண்டும்.
இங்குள்ள அனைவரும் மக்கள் சேவை பணியில் வெவ்வேறு விதமாக பணியாற்றுகிறார்கள். ஆனால் அதற்கு எல்லைகள் உள்ளன. ஆனால் குடிமைப் பணி சேவையில் பணியாற்றும்போது அது பறந்து விரிந்து இருக்கிறது. நீங்கள் முடிவு செய்யுங்கள். அதற்கு ஒரு இலக்கு வைத்து தீர்மானித்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் அதில் வெற்றி பெறுவீர்கள்.
ஒன்றைக் குறிப்பிட்டு கொள்கிறேன்.
வாழ்க்கை என்பது எழுதப்படாத நோட்டு. புத்தகங்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் எந்தப் பணியில் இருந்தாலும் சரி, நிறைவாக பணி மேற்கொள்ளுங்கள். ஒரு மனிதனுக்கு மதிப்பெண் முக்கியமல்ல. அவன் சமுதாயத்தில் பெறுகின்ற நன்மதிப்பு தான் அவன் பெரும் மதிப்பெண்.
ஆகவே சமுதாயத்தில் நீங்கள் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியா விட்டாலும் நம்மால் முடிந்த மாற்றத்தை உருவாக்க முடியும்.
முதலில் எந்தப் பாடத்தை எடுக்க வேண்டும் முடிவு எடுக்கவும், இரண்டாவதாக அதன் தொடர்பு உள்ள பாடங்களை தேடுங்கள், மூன்றாவதாக அதில் உள்ள கருத்துக்களை குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள். போட்டித் தேர்வில் குறிப்பு எடுத்தால் தான் ஒருவர் வெற்றி பெற முடியும். உங்களுடைய கல்லூரி தேர்வுகளிலேயே மருத்துவம் படித்தாலும் சரி எந்த பாடப்பிரிவுகளும் படித்தாலும் சரி உங்கள் ஆசிரியர் வகுப்பறையில் கற்றுக் கொடுக்கும்போது குறிப்பு எடுத்து படிக்க வேண்டும். அதில் உள்ள கருத்துக்களை குறிப்பு எடுத்து படித்துக் கொள்ளுங்கள், பின்னர் ஆசிரியர் கொடுத்த குறிப்புகளையும் நீங்கள் எடுத்து படித்த குறிப்புகளையும் ஒருங்கிணைத்து அதிலிருந்து புரியும் வகையில் குறிப்பு எடுத்து படியுங்கள். கடினமான பகுதிகளை யாரிடமாவது விவாதியுங்கள்.
இவ்வாறு செய்தால் வாழ்நாள் முழுவதும் படித்தவை மறந்து போகாது.
நீங்கள் மற்றவர்களை விட அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்றால் தெளிவாக எழுத வேண்டும். ஒருவர் நான்கு வரியில் முக்கியமான செய்திகளை குறிப்பிட்டால் நீங்கள் ஆறு செய்திகளை குறிப்பிட வேண்டும். அவர் குறிப்பிடாத முக்கியமான செய்திகளை குறிப்பிட வேண்டும். உங்களது விடைகளுக்கு அதிக மதிப்பெண் கிடைக்கும். எனவே அதிக தகவல்களை திரட்டுவதற்கு மூன்றாவதாக ஒரு அட்டவணையை தயாரித்து அதை பின்பற்றி படிக்க வேண்டும். நான் எப்பொழுதுமே சொல்வது படிப்பதில் ஆறுபடிகள் உள்ளது.
முதல் நடவை படிக்கும் பொழுது மகிழ்ச்சிக்காக படியுங்கள். மனப்பாடம் செய்ய படிக்காதீர்கள், இரண்டாவதாக நினைவில் வைத்துக்கொள்ள படியுங்கள், மூன்றாவது படித்ததை சொல்லிப் பாருங்கள், நான்காவது குறிப்பாக எழுதிப் பாருங்கள். ஐந்தாவது அதில் இருக்கக்கூடிய குறிப்புகளில் தவறுகளை சரி பார்த்துக் கொள்ளுங்கள். ஆறாவதாக படித்தது அனைத்தையும் திரும்பிச் சொல்லிப் பாருங்கள் இவ்வாறு படிப்பது மூலம் அனைத்திலும் தேச்ச்சி பெற்று தெளிவு பெற்று விடுவார்கள்.
தேர்வை பொருத்தவரை எல்லா போட்டித் தேர்வுகளிலும் நேரத்திற்கு ஏற்ப எழுதுவது முக்கியம். சில மாணவர்கள் நேர மேலாண்மையை கடைபிடிக்காது தெரிந்த விடைகளை எழுதாமல் வந்து விடுகிறார்கள். ஆளுமை தேர்வு ஒன்று நடைபெறும். இது உங்கள் அறிவை பரிசோதிப்பதற்காக மட்டுமல்ல உங்கள் தலைமை இருக்கின்றதா முன்னெடுப்புகள் இருக்கின்றதா சரியான பண்பு சிந்தனை இருக்கின்றதா?. உணர்ச்சி மேலாண்மை கட்டுக்குள் இருக்கின்றதா?. துணிச்சலான ஒன்றை எதிர்கொள்ள படிப்பறிவு
இருக்கின்றதா?. சபை யோசனை புத்தி இருக்கின்றதா போன்றவை எல்லாம் பரிசோதிப்பதற்கு தான் இந்த ஆளுமை திறன். படிக்கும் பொழுது தாழ்வு மணப்பான்மையுடன் படிக்காமல் தன்னம்பிக்கையுடன் படியுங்கள் போட்டி தேர்வில் வெற்றி பெறலாம் என முனைவர் வெ. இறையன்பு பேசினார்.
தொடர்ந்து போட்டி தேர்வு குறித்து மாணவ மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு தாமோதரன், தனித்துணை ஆட்சியர் சைபுதீன், மற்றும் கல்லூரி
பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.