கரூர். டிச.9.
கரூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி பொது மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மேற்கு பகுதி தெற்கு பகுதி வார்டுகளில் பொதுமக்களிடம் மின்சாரம் மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி கோரிக்கை மனுக்களை பெற்றார். கரூர் கோடங்கிபட்டி பட்டாளம்மன் கோவில் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் சிவகாமசுந்தரி, மாணிக்கம், இளங்கோ, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணைமேயர் தாரணி சரவணன், மண்டல குழு தலைவர் எஸ்.பி. கனகராஜ், கரூர் மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா, மாநகராட்சி ஆணையர் சுதா, முன்னிலை வகித்தனர். அமைச்சர் வி. செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது-
பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 100% தீர்வு காணப்படும். மாநகராட்சிக்கு புதிய காவிரி குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் நெரூர் உண்ணியூர் காவிரி ஆற்று பாலம், சிப்காட், ஐ.டி பார்க் இப்படி நிறைய திட்டங்களை முதலமைச்சர் வழங்கி உள்ளார்கள்.
அதானி நிறுவனம் குறித்தும் மின்சார கொள்முதல் குறித்தும் தெளிவான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. புரியவில்லை என்றால் மீண்டும் படித்து தெரிந்து கொள்ளலாம். படித்தும் புரியவில்லை. பக்குவமும் இல்லை அறிவு திறனும் இல்லை. அவர்கள் குறிப்பிடுவது கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம். அதுவும் உச்ச நீதிமன்றம் வரை சென்று அங்கு தடையாணை வழங்கவில்லை. அதனால் நிதி விடுவிக்கப்பட்டது .ஆனால் நாங்கள் ஏதோ ஒப்பந்தம் போட்டது போல தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். அது ஒருபோதும் எடுபடாது. மக்கள் நல திட்டங்கள் காரணமாக, அரசுக்கு ஆதரவு பெருகி வருகிறது. வரும் தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்வராவார்.
தமிழ்நாடு அரசு மின்சார கொள்முதல் மத்திய மின் அமைப்புடன்தான் ஒப்பந்தம் போட்டது. எந்த தனியார் அமைப்புடனும் ஒப்பந்தம் போடவில்லை. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நிர்வாக ரீதியாகவும், நிதிநிலைமை ரீதியாகவும் முற்றிலும் சீர்குலைந்திருந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தை அடுத்தடுத்த நிர்வாகச் சீர்திருத்த மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கை மூலம், இன்றைக்குத் தமிழ்நாடு மின்சார வாரியத்தைத் தலைநிமிர வைத்துள்ளவர் முதலமைச்சர் அவர்கள். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இப்படி அடிப்படை உண்மை கிஞ்சித்தும் இல்லாத பொய்க் குற்றச்சாட்டுகளை எதையாவது சொல்ல வேண்டும்- விமர்சிக்க வேண்டும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் தொடர்ந்து பூதக்கண்ணாடி போட்டு அவதூறு பரப்பி வருகின்றனர். அவையெல்லாம் தோல்வி அடைந்து வருவதால் விரக்தியில் இது போன்ற மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி அறிக்கைகளை விடுகின்றனர். சரியான கருத்தாக இருந்தால் இந்த அரசு அதுபற்றி பரிசீலிக்கும் . அதில் எந்த மாற்றமும் இல்லை.
ஏதாவது திமுக ஆட்சி மீது புகார் கூறவேண்டும் என்பதற்காக பூதக்கண்ணாடி போட்டு எதிர்க்கட்சிகள் பொய்யான அறிக்கைகளை வெளியிடுகின்றன. விமர்சனங்களை கண்டு திமுக ஒரு போதும் அஞ்சாது. அது பற்றி சிந்திப்பதும் கிடையாது. இந்தியாவிலேயே மிகக் குறைந்த விலையில் மின்சார வினியோகம் செய்வது, அதாவது ரூ. 2.61என்ற குறைந்த விலையில் வழங்குவது தமிழ்நாடு அரசு மட்டும்தான்.
தரம் குறைந்த வார்த்தைகளில்
என்னை குறித்து ஜாமீன் அமைச்சர் என்று ஒருவர் குறிப்பிட்டதை பற்றி கேட்கிறீர்கள். பாஜகவில் எத்தனை பேர் ஜாமீனில் வந்துள்ளனர். எத்தனைபேர் சிறைக்கு சென்று அமைச்சர்களாக உள்ளனர். என்று தெரியுமா?. அவர்கள் எல்லாம் ஜாமீன் அமைச்சர்களா?.
லண்டனுக்கு படிக்கச் சென்றது 11 பேர். அதில் ஒருவரை மட்டும் பெரிதுபடுத்துகிறீர்கள். 11 நபர்கள் இந்த பயிற்சிக்காக சென்றார்கள். மூன்று ஐஏஎஸ் அதிகாரி, 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சென்றனர். ஒருவரை மட்டும் பெரிது படுத்துவது ஏன்? . இந்த படிப்பினால் ஏதோ பெரிய மாற்றம் வந்துவிட்டது போல செய்திகளை வெளியிடுகின்றனர்.
இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.