ஜூன்.28.
டி20 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதிப் போட்டி கயானாவில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது இந்தியா. முதலில் பேட் செய்த இந்திய அணி ஸ்கோர் 19 ரன்ஆக இருந்தபோது விராட் கோலி ஆட்டம் இழந்தார். கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி 39 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். சூரியகுமார் யாதவ் 36 பந்துகளில் 47 ரன் எடுத்து அசத்தினார். ஹர்திக் பாண்டியா 13 பந்துகளில் 23 ரன் எடுத்து சிறப்பாக விளையாடினார். ஸ்கோர்: 20 ஓவர்கள். 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள்.
அடுத்த ஆடிய இங்கிலாந்து அணி இந்திய அணி வீரர்களின் பந்து வீச்சு – ஆடுகளத்தில் ஏற்பட்ட மாற்றம் இவைகளை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அடுத்தடுத்து விக்கட்டுகளை பறிகொடுத்து வீரர்கள் பெவிலியன் திரும்பினர். சால்ட்- பட்லர் ஜோடி களம் இறங்கியது. ஸ்கோர் 16ஆக இருக்கும் போது சால்ட்அவுட் ஆனார். கேப்டன் ஜோஸ்பட்லர் 23 ரன், ப்ரூக் 25 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். 16.4 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது இங்கிலாந்து அணி.
இந்த மைதானத்தில் சிறப்பாக பந்து வீசும் அணியே வெற்றி பெறும். மேலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. நிபுணர்களின் கணிப்புப்படியே செகன்ட் பேட்டிங்கில் இங்கிலாந்து வீரர்கள் தடுமாறினர். முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருக்க வேண்டும். இங்கிலாந்து கேப்டன் ஜோஸ்பட்லர் செய்த தவறால் இந்திய அணி வீரர்கள் முதல் பேட்டிங்கில் சிறப்பாக ஆடினர். மைதானம் 10 ஓவர்களுக்கு மட்டுமே பேட்டிங் செய்ய ஏதுவாக இருந்தது. அதன் பின் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானமாக மாறிவிட்டது என ரசிகர்கள் தெரிவித்தனர்.
இப் போட்டியில் 57 ரன்கள் குவித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஐந்தாயிரம் ரன்கள் என்ற சாதனையை படைத்துள்ளார். ஐந்தாயிரம் ரன்களைக் கடந்த இந்திய கேப்டன் என்ற பட்டியலில் ஏற்கனவே விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். அடுத்து டோனி, அசாருதீன், கங்குலி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.