சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆப்கானிஸ்தான் வீரர் நூர்அகமதுவை மெகா ஏலத்தில் 10 கோடி ரூபாய்க்கு வாங்கியது. சுழற்பந்துவீச்சாளரான இவர் தான் யார் என முதல் போட்டியிலேயே நிரூபித்து விட்டார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு கட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்கெட் எடுக்க முடியாமல் தடுமாறியதை பயன்படுத்தி மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில் மும்பை அணி பெரிய ஸ்கோரை நோக்கி போய்க்கொண்டிருந்தது. சூர்யகுமார் யாதவ்- திலக் வர்மா கூட்டணி 51 ரன்கள் சேர்த்தது. நூர் அகமது சூர்யகுமார் யாதவை வீழ்த்தி திருப்புமுனை ஏற்படுத்தினார். தொடர்ந்து பின்னர் திலக் வர்மா, அடுத்து வந்த ராபின் மின்ஸ் ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தினார். மும்பை இந்தியன்ஸ் அணி ஆட்டம் கண்டது. கடைசி நேரத்தில் நமன் திர் 12 பந்துகளில் 17 ரன்களும், தீபக் சாஹர் 15 பந்துகளில் 28 ரன்களும் சேர்த்ததால் மும்பை இந்தியன்ஸ் 155 ரன்கள் எடுத்தது.நமன் திர் விக்கெட்டையும் நூர் அகமது வீழ்த்தினார். நூர் அகமது மேற்கண்ட விக்கெட்களை உரிய நேரத்தில் எடுக்காமல் போயிருந்தால், மும்பை இந்தியன்ஸ் இந்த போட்டியில் 170 முதல் 180 ரன்கள் வரை விளாசி அது சிஎஸ்கே வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.
நூர் அகமது நான்கு ஓவர்களில் 18 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சிஎஸ்கே அணி 19.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இந்தப் போட்டியின் முடிவில் நூர் அகமது ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.