ஏப்.24.
சென்னை சூப்பர் கிங்ஸ் லக்னோ சூப்பர் ஜெயன்ஸ் அணிகள் இடையான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. சிஎஸ்கே அணி சிறப்பாக ரன்கள் குவித்தும், அபாரமாக பந்து வீசியும் வெற்றி பெறும் என வலுவான நிலையில் இருந்தது லக்னோ அணியின் ஸ்டெய்னிஸ் அதிரடி ஆட்டத்தால் சிஎஸ்கே அணியின் வெற்றி கனவு தகர்ந்தது. சிறப்பாக விளையாடி சதம் அடித்து மட்டுமின்றி கடைசி நேரத்தில் தேவையான ரண்களையும் அதிரடியாக எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார் ஸ்டெய்னிஸ்.
முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. கேப்டன் ருதுராஜ் பந்துகளை சரவெடியாக மாற்றினார். 60 பந்துகளில் 108 ரன்கள் குவித்தார். மறுபுறம் ஷிவம் துபே, 27 பந்துகளில் 66 ரன்கள் குவித்து ரசிகர்களை ஆரவாரம் செய்ய வைத்தார்.
211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விரட்டியது. அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் டிகாக் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். முதல் ஓவரில் டிகாக்கை வெளியேற்றினார் தீபக் சாஹர். 5-வது ஓவரில் கே.எல்.ராகுலை வீழ்த்தினார் ரகுமான். சிஎஸ்கே தான் வெற்றி பெறும் என்ற நிலையில் அந்த கணிப்பை அடித்து நொறுக்கினார் லக்னோ அணியின் வீரர் ஸ்டெய்னிஸ்.
அதன் பின்னர் ஸ்டெய்னிஸ் மற்றும் தேவ்தத் படிக்கல் இணைந்து 55 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். படிக்கல் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும் நிக்கோலஸ் பூரன் உடன் இணைந்து 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். பூரனும் 15 பந்துகளில் 34 ரன்களில் வெளியேற, தீபக் ஹூடாவுடன் இணைந்து 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஸ்டெய்னிஸ். 56 பந்துகளில் அவர் சதம் அடித்ததுடன் குறைவான பந்துகள்- கடைசி நேர பதட்டம் ஆகியவற்றையும் சமாளித்து தனி ஒருவனாக நின்று அணியை வெற்றி பெற வைத்தார் அவர். இவரது அதிரடி ஆட்டம் காரணமாக 19.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்.
இதன் மூலம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஸ்டெய்னிஸ் 124 ரன்கள் மற்றும் ஹூடா 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்துக்கு அந்த அணி முன்னேறியது. சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது இடத்தில் உள்ளது.

