சிங்கப்பூரில் நடைபெற்று வந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று, வரலாற்றில் முதல் முறையாக இளம் வயதில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார்.
138 வருட வரலாற்றில் 18 ஆவது சாம்பியன் குகேஷ் என்கிற பெருமையை பெற்றுள்ளார். இரண்டாவது இந்தியனாக சாம்பியன் பட்டத்தை முகேஷ் கைப்பற்றி இருக்கிறார். மிக இளம் வயது (18 வயது) சாம்பியனாக உருவாகியிருக்கிறார்.
ஏறக்குறைய 40 வருடங்களாக கேரி காஸ்ப்ரோவிடம் (22 வயது) (படத்தில் 13 ஆவது இடம்) இருந்த இளம் வயது சாதனையை குகேஷ் தட்டிப் பறித்திருக்கிறார். கேரி காஸ்ப்ரோ சாதாரண நபர் இல்லை, 255 மாதங்கள் அதாவது 21 வருடங்கள் தரவரிசையில் முதலிடத்தை வைத்திருந்திருக்கிறார். ஆறு முறை உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் பெற்றிருக்கிறார்.
அத்தகைய பெருமை மிகுந்தவரின் சாதனையை தகர்த்து, செஸ் உலகிற்கு தனது வருகையை ஆழமாக பதிவு செய்திருக்கிறார் குகேஷ்!
உலக செஸ் சாம்பியன்ஷிப்.. விஸ்வநாதன் ஆனந்த்-க்கு பின் கொடிநாட்டிய தமிழக வீரர்.. யார் இந்த குகேஷ்?.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சீனாவைச் சேர்ந்த டிங் லிரனை 7.5-6.5 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி குகேஷ் அபார சாதனையை படைத்த இவரது பயணம் 7 வயதிலேயே தொடங்கிவிட்டது. காது, மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவரான தந்தை ரஜினிகாந்த், பள்ளியில் இருந்து அழைத்து வர தாமதமானது. அதுவரை செஸ் விளையாடட்டும் என குகேஷை செஸ் கிளாஸில் சேர்ந்தார்.
அதுதான் குகேஷ்-க்கு வாழ்வின் திருப்புமுனையாக அமைந்துள்ளது. வாரத்திற்கு 3 நாட்கள், அதுவும் ஒரு மணி நேரம் தான் செஸ் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஓரிரு மாதங்களிலேயே செஸ்-ல் திறமையை கண்டு அவரது பயிற்சியாளர்கள் வியந்துள்ளனர். இதன்பின் வெளியில் போட்டிகளுக்கு அனுப்பப்பட, அங்கும் குகேஷ் தனது திறமையை நிலைநாட்டினார்.
9 வயதிற்குள்ளான ஏசியன் ஸ்கூல் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குகேஷ் வெற்றிபெற, 2018ஆம் ஆண்டு யு12 இளைஞர்களுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 5 தங்கப்பதக்கங்களை வென்றிருக்கிறார். 12 வயது, 7 மாதங்கள், 17 நாட்களிலேயே 3வது இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.
அதன்பின் குகேஷ் பங்கேற்ற அனைத்திலும் வெற்றிக்கு மேல் வெற்றி கிடைத்துள்ளது. சில மாதங்களுக்கு முன் செஸ் ஒலிம்பியாட் வென்ற இந்திய அணியிலும் குகேஷ் இடம்பிடித்திருந்தார். இதனிடையே 2013ஆம் ஆண்டு குகேஷின் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. 2013ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தமிழ்நாட்டின் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் மேக்னஸ் கார்ல்சன் இருவரும் மோதினர். அதில் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வியை சந்தித்தார்.
அதனை கண்ணாடி திரைக்கு வெளியில் நின்று பார்த்த முகங்களில் குகேஷின் முகமும் ஒன்று. தற்போது 11 ஆண்டுகளுக்கு பின் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று குகேஷ் சாதனை படைத்துள்ளார். வெற்றிக்கு பின் குகேஷ் பேசிய போது கூட விஸ்வநாதன் ஆனந்தின் தோல்வியை நினைவுபடுத்தி பேசினார். அந்த அளவிற்கு 2013 சம்பவம் குகேஷ் மனதில் ஆழமாக பதிவாகியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பாக FIDEவின் ரேட்டிங்கில் விஸ்வநாதன் ஆனந்தின் புள்ளிகளை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். தற்போது விஸ்வநாதன் ஆனந்திற்கு பின் உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற இந்தியர் என்ற சாதனையை குகேஷ் படைத்துள்ளார். இதற்கு முன்பாக விஸ்வநாதன் ஆனந்த 2007, 2008, 2010 மற்றும் 2012 ஆகிய 4 ஆண்டுகளில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். இதன்பின் சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் இந்திய வீரர் ஒருவர் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருக்கிறார்.
இவர்கள் இருவருமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால், தமிழக ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். வரும் நாட்களில் விஸ்வநாதன் ஆனந்த்-ஐ பார்த்து குகேஷ், பிரஞ்ஞானந்தா உள்ளிட்டோர் வந்ததை போல், குகேஷ் மற்றும் பிரஞ்ஞானந்தாவை பார்த்து இன்னும் பலர் வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.