நவ.6.
நுண்ணீர் பாசனத் திட்டத்தில் (Per Drop More Crop) குறைந்த நீரில் அதிக பரப்பு சாகுபடி செய்திட உதவும் உன்னத திட்டமான நுண்ணீர் பாசன திட்டம் மத்திய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இயற்கை நீர் வளம் குறைந்து கொண்டே வரும் இந்த சூழலில் இத்திட்டத்தின் மூலம் 40 முதல் 60 சதவீதம் நீர் சேமிக்கப்படுகிறது.
இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் சிறு, குறு விவசாயிகளுக்கு (100 சதவீத மானியத்தில்) நுண்ணீர் பாசன அமைப்புகள் எக்டர் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஜிஎஸ்டி வரியையும் சேர்த்து ரூபாய் 1.35 இலட்சம் வரை வழங்கப்படுகிறது.
சிறு மற்றும் குறு விவசாயிகள் காய்கறி மற்றும் அனைத்து தோட்டக்கலை பயிர்களுக்கும் 5 ஏக்கர் வரை மானியத்தில் நுண்ணீர் பாசன அமைப்புகளை தங்கள் நிலங்களில் அமைத்துக்கொள்ளலாம். இதர விவசாயிகள் 75 சதவீத மானியத்தில் 12.5 ஏக்கர் வரை இத்திட்டத்தில் பயன்பெறலாம். சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து 7 வருடம் நிறைவுற்று இருந்தால் புதிதாக மீண்டும் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து கொள்ளலாம். மேலும், சேதம் அடைந்துள்ள உபகரணங்கள் (பக்கவாட்டு குழாய்) மட்டும் மானியத்தில் பெற்று சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து கொள்ளலாம். தெளிப்பு நீர் பாசனம் அமைத்து மூன்று ஆண்டு நிறைவு பெற்றிருந்தால், சொட்டு நீர் பாசனமாக மாற்றி கொள்ளவும் இணைய வழியில் விண்ணப்பித்து பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டமானது கரூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் நடப்பாண்டில் சுமார் 1200 எக்டர் பரப்பில் ரூ.550 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் புகைப்படம், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், அடங்கல், கூட்டு வரைபடம், கணினி சிட்டா, மறு ஆய்வு தீர்வு பதிவேடு (Resurvey Settlement Register), நிலவரைபடம், சிறு/ குறு விவசாயிகளாக இருப்பின் அதற்காக வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட சான்று, கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்படும் நிலவுடைமை சான்று. கூட்டு சிட்டாவாக இருந்தால் நில பத்திர நகல் ஆகிய ஆவணங்களுடன் அருகில் இருக்கும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். அல்லது https://tnhorticulture.tn.gov.in:8080 விண்ணப்பித்து நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் பயன் பெறுமாறு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.