மார்ச்.29.
கரூர் கைத்தறி ஏற்றுமதி துணி உற்பத்தியாளர்கள் சங்க புதிய கட்டடத்தை கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியது-
தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறக்கூடிய சூழலில் அரசின் நிதி நிலையயும், ஏற்கனவே இருந்தவர்கள் எந்த அளவிலே இதனை விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்கிற நிலையையும், அனைவரும் நன்கு அறிவோம். அப்படிப்பட்ட சூழலிலும் கூட தன்னுடைய நிர்வாகத்திறமையினால், குறிப்பாக ஜவுளி துறைக்கு என்று பல்வேறு சிறப்பு திட்டங்களை முதலமைச்சர் வழங்கி இருக்கின்றார்.
கரூர் மாவட்டத்திற்கு 200 ஏக்கர் பரப்பளவில் புதிதாக தொழிற் பூங்கா அமைப்பதற்காக இந்த அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்கள். 200 ஏக்கர் நிலம் பரப்பளவு என்பது ஒரு சவாலாக இருக்கின்றது. முருங்கை ஏற்றுமதிப் பூங்கா அமைப்பதற்காக 16 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு விரைவில் அந்த நிலமும் அரசுக்கு துறைக்கு ஒப்படைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. ஒரு வேளாண்மை கல்லூரி ஆட்சி பொறுப்பேற்று முதல் ஆண்டிலேயே கொடுத்து இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்குகின்ற இந்த சூழலில் அதற்கு 110 ஏக்கர் நிலம் வேண்டும் அனைத்து திட்டங்களையும் மாவட்டத்தினுடைய வளர்ச்சிக்கு கொண்டு சேர்ப்பதற்கு முழு முயற்சியுடன் செயலாற்றி வருகிறோம்.
மின்வாரியத்தினுடைய கடன் சுமை ஒரு லட்சத்து 59 ஆயிரம் கோடியாக இருந்த பொழுதும் கூட தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட அறிவிப்பாக கைத்தறிக்கு 200 யூனிட்லிருந்து 300 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும், விசைத்தறிக்கு 750 யூனிட் டில் இருந்து 1000 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிப்பையும் கையெழுத்திட்டு அதற்கான நிதிகளை அரசு மானியமாக வழங்கி அதை நிறைவேற்றி தந்திருக்க கூடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாத பழைய கட்டிடமாகவே இருந்த கரூர் காமராஜர் சந்தை புதிதாக வடிவமைத்து கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ. 40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. புதிதாக மீன் மார்க்கெட் அமைக்க டெண்டர் முடிக்கப்பட்டு பணிகள் தொடங்க இருக்கின்றன.
நீண்ட ஆண்டு கால கோரிக்கை பல நூற்றாண்டுகளுக்கு மேலாக இருக்கக்கூடிய கோரிக்கை நம்முடைய நெரூர் – திருச்சி மாவட்டம் உண்ணியூர் இணைக்கக்கூடிய காவிரி ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் கட்டப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை. சென்னை செல்வோர் திருச்சி போகாமல் நேராக காட்டுப்புத்தூர் வழியாக சென்றுபயண நேரத்தை குறைப்பதற்கான திட்டம்.
அறிவிக்கப்பட்ட ஆண்டு 2013. அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்ட ஆண்டு 2014. அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆண்டு 2022 ஒதுக்கியவர் நம்முடைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் . அதற்கான டெண்டர் முடிந்துவிட்டது 87 கோடி ரூபாய் மதிப்பில் மாவட்டங்களை இணைக்கும் வகையில் கட்டப்படுகிறது.
அரவக்குறிச்சியில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குளித்தலை மருதூரில் கதவணை. இப்படி நான்கு தொகுதிகளையும் பார்த்து தொடர்ந்து திட்டங்களை தந்திருக்கின்றார்கள். இதுவரை என்னை பொருத்தவரை நம்முடைய மாவட்டத்திற்கு வழங்கப்பட்டிருக்கக்கூடிய திட்டங்கள் உடைய மதிப்பீடு என்று பார்த்தால் ஏறத்தாழ ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கு மேல் அரசினுடைய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை செய்து அதற்கான பணிகள் இப்பொழுது தொடங்கப்பட்டிருக்கின்றன என்றார்.