மார்ச்.10.
கரூர் அட்லஸ் மண்டபத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 300 கர்ப்பிணிப் பெண்களுக்கு தமிழ்நாடு அரசின் சீர்வரிசைப்பொருட்களையும், மற்றும் 98 மகளிருக்கு ரூ.1.18 கோடி மதிப்பீட்டில் 784 கிராம் தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவியை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
இவ்விழாவில் 300 கர்ப்பிணி பெண்களுக்கு புடவை. மஞ்சள், குங்குமம், வளையல், வெற்றிலை பாக்கு உள்ளிட்ட சீர்வரிசை தாம்பூலங்கள் மற்றும் 5 வகை உணவு வழங்கப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு தாய்க்கும் மறுபிறவி என்றே குறிப்பிடும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பொருளாதார வசதியற்ற குடும்பத்தை சார்ந்த பெண்களும் தேவையான ஊட்டச்சத்து பெறுவதை உறுதிபடுத்தப்படுகிறது. மகப்பேறுக்கு நிதியுதவி, தடுப்பூசி இரும்புச்சத்து மருந்துகள், ஊட்டசத்துமாவு சேவையாற்றிய செவிலியர்களுக்கு ஊக்கப்பரிசு என கர்ப்பிணிகள் மீது தனிக்கவனம் செலுத்தும் அரசாக தமிழ்நாடு அரசு திகழ்கிறது. முதலமைச்சர் அவர்களின் திராவிட மாடல் அரசு ஒரு தந்தையாக இருந்து மகப்பேறு திட்டங்களை மேம்படுத்தி வருகிறார்கள்.
இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டுமே கர்ப்பமடைந்ததை பதிவு செய்வதில் இருந்து கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலை. குழந்தை பிறந்து தடுப்பூசி செலுத்துவது. குழந்தைகளின் ஊட்டச்சத்து வரை கர்ப்பிணிகள் மீது தனிக்கவனத்துடன் கண்காணித்து மருத்துவ உதவி வழங்கி வருகிறது. அதன் ஒரு அங்கமாக கர்ப்பிணித் தாய்மார்களின் நலம் காக்கவும். தாய்சேய் நலனை மேம்படுத்தவும் விழிப்புணர்வு நிகழ்வாக இந்த சமுதாய வளைகாப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இந்நிகழ்ச்சி கரூர் மாவட்டத்தில் உள்ள 08 வட்டாரங்களில் நடத்தப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு பிறக்கவிருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு வளையல் ஊட்டச்சத்துப் பொருட்கள் மற்றும் சீதனப்பொருட்களை அரசு வழங்கி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மட்டும் 300 கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசைப் பொருட்கள் மற்றும் 5 வகையான கலவை சாதங்கள் விருந்தாக அரசின் சார்பில் பரிமாறப்படுகிறது என்றார்.
இவ்விழாவில் கரூர் தொகுதி எம்.பி.ஜோதிமணி, எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.