நவ.13.
கரூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 11.11.2024 முதல் 10.12.2024 வரை அனைத்து வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளுக்கு இலவசமாக கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 2வது சுற்று ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெறவுள்ளது. இதற்காக 3,24,000 டோஸ்கள் தடுப்பூசி பருந்துகள் பெறப்பட்டு மாவட்டம் முழுவதிலும் உள்ள செம்மறி ஆடுகள் 180900. வெள்ளாடுகள் 143100 மொத்தம் 324000 ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது.
ஆட்டுக்கொல்லி நோய் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை தாக்கும் ஒரு வைரஸ் நோயாகும். பாதித்த ஆடுகளில் அதிக காய்ச்சல், சளி, கண்களில் நீர் வடிதல், கழிச்சல் போன்ற அறிகுறிகள் காணப்படும். இந்தோய் ஆடுகளில் 90% இறப்பை ஏற்படுத்துவதால் ஆடு வளர்ப்போருக்கு அதிக பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
இக்கொடிய நோயை ஒழிக்கும் பொருட்டு கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் அனைத்து ஆடுகளுக்கும் ஆண்டுக்கு ஒருமுறை மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து இலவசமாக தடுப்பூசி போடப்படும்.
சென்ற ஆண்டு முதல் சுற்றில் அனைத்து ஆடுகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. அதுபோன்று இந்த ஆண்டும் அனைத்து தகுதியான மூன்று மாதங்களுக்கு மேற்பட்ட வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளுக்கு 11.11.2024 முதல் 10.12.2024 முடிய 30 நாட்களுக்கு கிராம அளவில் முகாம் அமைத்து மருத்துவக் குழுக்கள் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் தடுப்பூசி போடப்படவுள்ளது.
மேலும், இது குறித்து முன்கூட்டியே தக்க விளம்பரம் செய்து கிராமங்களில் தடுப்பூசி போடப்படும். எனவே, ஆடு வளர்ப்போர் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தடுப்பூசியை இலவசமாக போட்டு பயன்பெறுமாறு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.