செப்.11.
கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் துவக்கி வைத்தார். மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், எம்.எல்.ஏக்கள் .மணிக்கம், மொஞ்சனூர் இளங்கோ, சிவகாமசுந்தரி முன்னிலை வகித்தனர்.
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024 (Tamil Nadu Chief Ministers Trophy Games 2024) தொடங்கி வைத்ததை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள். பொதுப்பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் மாவட்ட அளவில் 27 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 53 வகையான போட்டிகளும் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கரூர் மாவட்டத்தில் 10.09.2024 முதல் 23.09.2024 வரை பல்வேறு இடங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.
கரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி அரசு ஊழியர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுப்பிரிவில் 17574 நபர்கள் இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் 654 முதலிடம் 854 இரண்டாமிடம். 854 மூன்றாமிடம். மண்டல அளவில் 112 முதலிடம் 112 இரண்டாமிடம். 112 மூன்றாமிடம் பரிசு வழங்கப்பட உள்ளது. மாவட்ட அளவிலான பரிசுத்தொகை முதலிடம் 3000. இரண்டாமிடம் 2000, மூன்றாமிடம் 1000 விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களின் வங்கிக் கணக்கில் வழங்கப்படும். மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கும் அணிகள் மாநில அளவிலான போட்டிக்கும், தனி விளையாட்டுப் போட்டிகளிலும் முதல் இடத்தை வென்றவர்கள் மாநில போட்டிக்கும் செல்வார்கள். மாநில அளவிலான போட்டியில் முதலிடம் ரூ. 1,00,000 இரண்டாமிடம் 75.000 மூன்றாமிடம் 50000 வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி துணை மேயர் சரவணன், டிஎஸ்பி. செல்வராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயலட்சுமி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் அலுவலர்கள் உடன் இருந்தனர்.