பிப்.25.
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு .க. ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் பேசியது-
திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் தேர்தல் வாக்குகளை நிறைவேற்றி வருகிறோம் மகளிருக்கு இலவச பேருந்து பயணம், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம். எந்த கட்சி உறுப்பினராக இருந்தாலும் 234 தொகுதிகளுக்கும் உறுப்பினர்களின் கோரிக்கையை கேட்டு நிறைவேற்றி தரும் திட்டம், ஆட்சிக்கு வந்த பிறகு இந்த ஒன்றரை ஆண்டு காலத்திலேயே ஒன்றரை லட்சம் உழவர்களுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
நகர்ப்புற சாலைகள் மேம்பாடு, இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், வேலை வாய்ப்பை பெறுவதற்கு கல்லூரியில் படிக்கும் போதே திறன் பயிற்சி அளிக்கும் நான் முதல்வன் திட்டம், நம்மை காக்கும் 48 திட்டம், வள்ளலார் பிறந்தநாளை கொண்டாட சட்டம் , கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், அன்னை தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக்குவது, மாவட்டம் தோறும் புத்தக கண்காட்சிகள், 20 புதிய கலை அறிவியல் கல்லூரிகள் திறப்பு, புதிய தொழிற் பயிற்சி நிலையங்கள், காவல் ஆணையம், உயர்கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி, கல்லூரி கனவு, வேலைவாய்ப்பு முகாம்கள், தமிழ் பரப்புரை கழகம், சிறு குறு புத்தாக்க நிறுவனங்கள், பொறுப்பு மிக்க மாணவர்களை உருவாக்க சிற்பி திட்டம், கொண்டுவரப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி ஒழிப்புச் சட்டம், நீர் தேர்வு விலக்கு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆளுநர் அல்லது ஒன்றிய அரசோ இதை பற்றி சிந்திக்கவில்லை. கவலைப்பட வில்லை குறுகிய காலத்திற்குள் நீட் தேர்விற்கான விலக்கு பெற்றே தீர வேண்டும். அதற்கான எல்லா முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். பெண்களுக்கு உரிமை தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவது குறித்து நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படும். இது ஸ்டாலின் சொல்லும் வார்த்தை எடப்பாடி சொன்ன வார்த்தை அல்ல.
85 சதவீதம் சொன்ன பணிகளை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் திமுக ஆட்சிக்கு வந்து எதையும் செய்யவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஐந்தாண்டுகள் தேவையில்லை. எல்லா பணிகளையும் நிறைவேற்றி காட்டுவேன். நான் சாதாரண ஸ்டாலின் அல்ல. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
பத்து வருடம் ஆட்சியில் இருந்தீர்களே தற்போது நீங்கள் என்ன செய்து கிழித்தீர்கள்?. இதுதான் என்னுடைய கேள்வி?. இலவச செல் போன், ஆவின் பால் பாக்கெட் 25 ரூபாய், வீடுதோறும் அம்மா மினரல் வாட்டர், எந்த வீட்டிக்காவது கொடுத்தீர்களா?. மூணு சென்ட் நிலம்- மளிகை பொருட்கள் குறைந்த விலையில் வழங்குவது, கல்வி கடன் ரத்து, அம்மா வங்கி அட்டை, கோ டெக்ஸ் துணி வாங்க 500 ரூபாய் கூப்பன், பண்ணை மகளிர் குழுக்கள் என எதையும் நிறைவேற்றவில்லை . தந்தஉறுதிமொழியை நிறைவேற்ற முடியாத ஒரு ஆட்சியாக அதிமுக ஆட்சி இருந்தது. கஜானாவை காலி செய்துவிட்டு கொள்ளையடித்து விட்டு சென்று விட்டீர்கள். கடன் வேறு வைத்து விட்டு சென்று விட்டீர்கள். அவ்வளவு கொடுமைகளையும் தாங்கி- கடனையும் தாங்கி -திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். கொரோனா காலத்தில் பொது மக்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுங்கள் என்றோம் ஆயிரம் ரூபாய் கொடுத்தனர் . நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நான்காயிரம் ரூபாய் தருவோம் என்று சொல்லி கொடுத்தோமா இல்லையா?. ஈவிகேஎஸ் .இளங்கோவனுக்கு கை சின்னத்தில் நீங்கள் வெற்றி தேடி தர வேண்டும் என்றார்.