கோவை.ஏப்.25.
கோவையில் கைத்தறி நெசவாளர்கள் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நெசவாளர்களுக்கு வீடு கட்டுவதற்கு தலா. ரூ.4லட்சம் வீதம் 26 நெசவாளர்களுக்கு ரூ.1.04 கோடி மதிப்பிலான பணி ஆணைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டி-
திருமண மண்டபங்கள், மைதானங்களில் மதுபானத்திற்கு அனுமதி இல்லை. ஏனைய நிகழ்ச்சிகளிலும் மதுபானங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்கு மதுபானத்திற்கு அனுமதி வழங்கியது போல தமிழகத்தில் அனுமதி வேண்டும் என்று கூறியதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் மட்டும் மதுபானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கூடுதலாக மின் தேவை ஏற்பட்டாலும் சமாளிக்க தயார் நிலையில் மின்வாரியம் உள்ளது. வரலாறு காணாத அளவிற்கு மின் தேவை அதிகரித்துள்ளது. எனினும் மின் பயன்பாட்டில் இன்னும் கூடுதலாக உச்சபட்ச தேவை இருந்தாலும் மின்வாரியம் சமாளிக்கும். கோவையில் இருந்து மின்சார தொடர்பான பதிவு வந்தது அதை பார்த்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபரிடம் எந்த பகுதி என கூறுங்கள் சரி செய்கிறோம்என கேட்டபோது நான் பொதுவாக பதிவிட்டேன் என்று கூறினார். இதுபோல் அவதூறு செய்திகளை பரப்புகிறார்கள். எனவே நுகர்வோர் பாதிப்பு- குறை இருந்தால் மின் இணைப்புடன் பதிவிட வேண்டும். அவ்வாறு பதிவிட்டால் உடனடி நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும். 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் செயல்படும் மின்னகத்தை தொடர்பு கொண்டு குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
பலமுறை கூறியிருக்கிறேன். இருந்தாலும் ஒரு நபரை பற்றி தொடர்ந்து கேட்கிறீர்கள். ஊழல் பட்டியலில் வெளியிடுவதற்கும் சொத்து பட்டியலை வெளியிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அனைவருமே வேட்பாளர்களாக இருந்து சொத்து பட்டியலை தாக்கல் செய்துள்ளனர். அப்போதே கேள்வி கேட்டு இருக்கலாம். அல்லது அதை வைத்து வழக்கு தாக்கல் செய்திருக்கலாம் .அதை விட்டுவிட்டு முதலில் சொன்னது ஊழல் பட்டியல் என்று கூறிவிட்டு எந்த ஆதாரமும் அடிப்படை தகுதியும் இல்லாமல் குறைந்தபட்ச அளவு மண்டையில் மூளை இல்லாமல் சொத்துப் பட்டியலை வெளியிடுகிறார். அடுத்த முறை பார்க்கும் போது இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். அல்லது தெரிந்தவர்களிடம் கேட்டு இந்த மாதிரி அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். அண்ணன் ராஜீவ் காந்தி போன்ற வழக்கறிஞர்களிடம் கேட்டு தெரிஞ்சுக்க சொல்லுங்கள்.
பாஜகவில் உறுப்பினர்கள் எண்ணிக்கை எவ்வளவு?. நாங்கள் தைரியமாக சொல்கிறோம். ஒரு கோடி பேர் திமுகவில் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இரண்டு கோடியாக உயர்த்துவதற்கு தொகுதி வாரியாக பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் நிறைவு பெற்றதும் 2 கோடி உறுப்பினர்கள் இருப்பார்கள். பாஜகவின் தமிழக உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?. அவர்களுக்கு எவ்வளவு ஓட்டு இருக்கிறது. கட்சியின் நிலைமை என்ன என்பதை சொல்லிவிட்டு அடுத்த கட்டத்திற்கு போக சொல்லுங்கள்.
சமூக வலைதளங்களில் ஆராய்ந்து பார்த்து வெளியிட வேண்டும். அரசின் மீது தவறுகள் இருந்தால் உண்மையாக இருந்தால் கண்டிப்பாக அரசு நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறது. கோயமுத்தூர் வரலாற்றில் இல்லாத அளவிற்கு டெக்ஸிட்டி ஐடி பார்க் அமைக்கப்பட இருக்கிறது. செம்மொழி பூங்கா, மெட்ரோ ரயில் திட்டம் 9 ஆயிரம் கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட இருக்கிறது.கடந்த காலங்களில் வெறும் வார்த்தைகளாக பத்திரிகையில் மட்டும் தலைப்பு செய்தியாக இருந்தவர்களைஆட்சி பொறுப்பு ஏற்று இரண்டு ஆண்டுகள் கூட முடியாத நிலையில் முதல்வர் செயல்படுத்தி வருகிறார்கள். சென்னைக்கு இணையாக கோவை மாவட்டத்தினுடைய வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தி வருகிறார். ஒரு எம்எல்ஏ கூட ஆளுங்கட்சியில் இல்லை. அதற்காக மற்றவர்களைப் போல திட்டங்களை நிறுத்தவில்லை. கட்சி வித்தியாசம் பார்க்காமல் அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே மாதிரியான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த கூடிய முதலமைச்சர். எல்லோருக்கும் எல்லாம் இது அனைவருக்குமான ஆட்சி என தொடர்ந்து முதல்வர் செயல்பட்டு வருகிறார்.
அவதூறு செய்தி பரப்புவோர் அவர்கள் யாராக இருந்தாலும் சரி நீங்கள் சொல்கின்ற நபராக இருந்தாலும் சரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
உண்மையிலேயே மக்கள் பணியாற்ற நினைப்பவர்கள் மக்கள் தொடர்பான கருத்துக்களை தேவைகளை அரசுக்கு முன் வைக்கலாம். நீங்கள் குறிப்பிடும் நபர் ஒரு கோமாளி. பத்திரிகையாளர்களை கேள்வி கேட்கக்கூடாது என்று கூறிவிட்டு வீடியோ வெளியிடுகிறார் . நீங்கள் கேட்க வேண்டும் வீடியோவை அலுவலகத்திற்கே அனுப்பிவிட்டு போக வேண்டியது தானே. நாங்கள் வேறு வேலையைப் பார்ப்போம் என்று நீங்கள் கூற வேண்டும். நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள் நான் பதில் சொல்கிறேன் . அவர் கேள்விகளுக்கு பதில் சொல்கிறாரா?.
நான் வாட்ச் பில் தான் கேட்டேன். முதல் நாள் கேள்வி கேட்கும் போது வாட்ச் நண்பர் மூலம் மூலம் எனக்கு வந்தது என சொல்லி இருந்தால் பிரச்சினை முடிந்திருக்கும். ஆனால் வாட்ச் வாங்கியவர்கள் யார் யார் எனத் தேடிப் பிடித்து, அதில் ஒருவரை தனது நண்பராக்கி அவர் கொடுத்தார் என்று பல மாதங்கள் கழித்து கூறுகிறார். மூன்றரை லட்சம் ரூபாய் வாட்ச் 2 லட்சம் ரூபாய்க்கு இவர் வாங்கினாராம். அன்றைய தேதியில் 2 லட்சம் ரூபாய் அக்கவுண்ட்டில் பணம் எடுத்து இருக்க வேண்டும் அல்லவா?. 2 லட்சத்துக்கு மேல் பணம் எடுக்கக் விதிமுறைகளை கொண்டு வந்தது யார்?. அதை மீறியது எப்படி ?. இந்த பணத்தை யார்கொடுத்தார் புரியவில்லை. அதிக விலை கொடுத்து வாங்கிய வாட்ச் குறைந்த விலைக்கு யாராவது கொடுப்பார்களா?. ஒரு பொய்யை மறைக்க ஓர் ஆயிரம் பொய்யை சொல்லிக் கொண்டிருக்கிறார் . நாட்டு மக்கள் இதை ஏற்க மாட்டார்கள் இவர்கள் எண்ணம் பலிக்காது பொய் குற்றச்சாட்டுகள் ஒருநாளும் எடுபடாது என்றார்.