டிச.15.
நாடாளுமன்ற மக்களவையில் கூடுதல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி. மஹுவா மொய்த்ரா ஆவேசமாக பேசியது-
மோசமான நிலையில் உள்ள பொருளாதாரத்தை மீட்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில்துறை 26 மாதங்களில் இல்லாத அளவிற்கு நான்கு சதவீதம் சரிந்தது. வேலைகளை உருவாக்கும் உற்பத்தி துறை வளர்ச்சி 5.6 சதவீதமாக குறைந்துள்ளது. ஆளுங்கட்சியின் தலைவர் தனது சொந்த மாநிலத்திலேயே வெற்றி பெற முடியவில்லை. 50 சதவீதம் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் வருவதாக நிதியமைச்சர் கூறியுள்ளார் .ஆனால் செல்வந்தர்கள் பணம் செலுத்தி மற்ற நாடுகளுக்கு செல்ல குடியுரிமையை பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள். பத்து மாதங்களில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். இதுதான் ஆரோக்கியமான வரி சூழலா?.
ஆளுங்கட்சி பலநூறு கோடியை செலவழித்து மக்கள் பிரதிநிதிகளை வாங்குகிறது. ஆனால் அமலாக்கத்துறை 95 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சிகளை குறிவைத்து நடத்துகிறது. 2016 இல் அறிவிக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வி அடைந்து விட்டது. கள்ள நோட்டுகளை ஒழிப்பது இன்னும் கனவாகவே உள்ளது என்றார்.