நவ.19.
தற்போது இரயில் முன்பதிவு காலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டு இரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு கடந்த நவ.1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இது பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியான நிலையில், பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் சுருக்கமாக டிக்கெட் கிடைப்பதை மேம்படுத்தவும், தவறான பயன்பாட்டைக் குறைக்கவும், இந்திய ரயில்வே தனது டிக்கெட் முன்பதிவு விதிகளை திருத்தியுள்ளதாக இரயில்வே துறை விளக்கம் அளித்தது.
இந்நிலையில் தற்போது பயணிகள் நலன் கருதி பேருந்துகளில் முன்பதிவு காலம் 60-ல் இருந்து 90 நாட்களாக அதிகரித்து தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பு இன்று (நவ.18) பகல் 12 மணி முதல் அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு :
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பயணிகளிடம் இருந்து கிடைத்த கருத்துக்களின் அடிப்படையில் பயணிகள் நீண்ட காலத்திற்கு முன்பே பயண திட்டமிடலுக்கு ஏதுவாக தற்போது நடைமுறையில் உள்ள 60 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யலாம் என்பதனை 90 நாட்கள் என உயர்த்தி 18-ந்தேதி (திங்கட்கிழமை) இன்று மதியம் 12 மணி முதல் அமல்படுத்தப்படுகிறது.
பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC அதிகாரப்பூர்வ மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.