அக்.5 . தமிழ்நாடு மின்சார வாரியம் மின் வினியோகம் தொடர்பான புகார்கள் அளிப்பதற்காக 94987 94987 என்ற தொலைபேசி எண் அறிவித்து மின்னகம் என்ற பெயரில் செயல்படுத்தி வருகிறது. சென்னையில் செயல்படும் மின்னகத்தில் மூன்று ஷிப்ட்களில் 2 மேற்பார்வையாளர்கள் உள்பட 65 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கீழ் இயங்கி வரும் 44 மின் பகிர்மான வட்டங்களிலும் நாள் ஒன்றுக்கு நான்கு பேர் வீதம் 176 நபர்களைக் கொண்டு 24 மணி நேரமும் மின்னகம் செயல்பட்டு வருகிறது.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று மின்னகத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். மின் இணைப்பு எண்ணுடன் அளிக்கப்படும் புகார்கள் உனுக்குடன் தீர்வு எட்டப்படுகிறது. மின்தடங்கல் காரணத்தை கண்டறிந்து உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், தடையில்லா சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைக்க அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளு மாறும் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைவர்- மேலாண்மை இயக்குனர் நந்தகுமார், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக மேலாண்மை இயக்குனர் அனிஷ் சேகர், இணை மேலாண்மை இயக்குனர் விஷூமகாஜன், இயக்குனர்கள் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மின்தடை தொடர்பான புகார் மையம் மாவட்ட அளவில் இருந்த நிலையை மாற்றி மாநில அளவில் தொலைபேசி எண்ணுடன் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு மின்னகம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மின்னகத்தில் இதுவரை 2869876 புகார்கள் பெறப்பட்டு 2864215 புகார்கள் அதாவது 99.80 சதவீதம் அளித்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.